பாரத ரத்னா அப்துல் கலாமின் வாழ்க்கை சரிதை திரைப்படமாக உருவாகிறது!!!
பாரத ரத்னா அப்துல் கலாமின் வாழ்க்கை சரிதை திரைப்படமாக உருவாகிறது
முன்னாள் ஜனாதிபதி,
மறைந்த அப்துல் கலாமின் எளிமையுடன் கூடிய சிறந்த வாழ்க்கையை
திரைப்படமாக இயக்க முடிவு செய்துள்ள தயாரிப்பாளரும், இயக்குனருமான நிலா
மத்ஹாப் பாண்டா, அந்த உயர்ந்த மனிதரின் வாழ்க்கையை மிக குறுகிய காலத்தில் திரைப்படமாக
தயாரித்து விடுவது அத்தனை எளிதான காரியம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் உயிருடன் இருந்தபோதே அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பது தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்திவந்த பாண்டா, ‘ஐ யாம் கலாம்’ என்ற படத்தை இயக்கி கடந்த 2011-ம் ஆண்டு வெளியிட்டார்.
அப்துல் கலாமின் உத்வேகம் நிறைந்த பேச்சை கேட்கும் ஒரு சிறுவன், தனது வாழ்கையில் எப்படி தன்னம்பிக்கையுடன் உயர்கிறான்? என்ற மூலக்கதையுடன் உருவான இந்தப்படம் விமர்சகர்களின் வெகுவான பாராட்டை பெற்றது, நினைவிருக்கலாம்.
தற்போது, அவரது மறைவிக்கு பின்னர், அப்துல் கலாமின் எளிமையுடன் கூடிய சிறந்த வாழ்க்கையை திரைப்படமாக இயக்க தீர்மானித்துள்ள பாண்டா, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
எனினும், மற்ற திரைப்படங்களை தயாரிப்பதுபோல் ஆறேழு மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் இந்தப் படத்தை தயாரித்துவிட முடியாது. அப்துல் கலாமுடன் நான் அதிக நேரத்தை கழித்துள்ளேன். அவரைப் பற்றிய முழுமையான தகவல்களுடன் கூடிய படத்தை தயாரிக்க வேண்டுமென்றால் இதற்கென மூன்றாண்டுகளை ஒதுக்க வேண்டியது இருக்கும். இந்தப் படத்தின் துவக்க வேலையை எப்போது தொடங்கலாம்? என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறேன் என நிலா மத்ஹாப் பாண்டா கூறியுள்ளார்.