பாவிகளின் ரத்தத்தை குடிக்க நாக்கினை தொங்கப்போட்டிருக்கும் உருவங்கள்: "திக் திக் திகில் நரகம்"
தாய்லாந்தில் உள்ள ’நரக தோட்டம் ’(Hell Garden), அந்நாட்டின் முக்கியமான சுற்றுலாதலங்களில் ஒன்றாக உள்ளது. இது அங்குள்ள சீன் சுக் என்ற கிராமத்தில் உள்ளது. இது வாங் சீன் சுக் மடாலய தோட்டம் என்றும் தாய்லாந்தின் திகில் நரக பூங்கா என்றும் வேறுபெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அமைவிடம்: சாய் 2, சோய் 19, சீன் சுக் கிராமம். இந்த நரக தோட்டம் சோன் புரி நகருக்கு அருகிலும், தலைநகரான பாங்காக்கில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் தென்கிழக்கிலும் அமைந்துள்ளது.நரகத்தில் நடக்கும் பாவிகளுக்கான வதைகொடுமைகளை பொம்மை காட்சிகளாக சித்தரித்து வைக்கப்பட்டிருப்பதுதான் இந்த பூங்காவின் தனிச்சிறப்பு. நுழைவாயிலிலேயே ‘நரகம் உங்களை வரவேற்கிறது’ என்ற வாசகம் உள்ளது. இந்த தோட்டத்துக்கு தெற்கே அருகிலேயே பேங் சீன் பீச் உள்ளது. அங்கு ’தாய் ஓட்டல் ரிசார்ட்டும் உள்ளது. பட்டயா அல்லது கண்கவர் தீவும் அங்கு உள்ளதால் உள்நாட்டு மக்கள் அதிகமாக குவியும் சுற்றுலாதலமாக விளங்குகிறது. வெளிநாட்டவர்களும் இந்த ஹெல் கார்டனை பார்த்துவிட்டோ, கடந்தோ அந்த இனிய கடற்கரையை ரசிக்க செல்ல தவறுவதில்லை. அதனால், இந்த ஹெல் கார்டனை பார்க்க வருபவர்களுக்கு அருகிலேயே இன்னொரு சுற்றுலா இடம் இருப்பது கூடுதல் பலன். மரணத்துக்கு பிறகு, சொர்க்கம், நரகம் என்ற இரண்டு உலகம் இருப்பதாக பெரும்பாலான மதங்களில் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ்க்கையில் செய்கிற நல்ல, தீய செயல்களுக்கு ஏற்ப சொர்க்கத்திற்கோ அல்லது, நரகத்திற்கோ மரணத்திற்கு பிறகு அனுப்பப்படுகிறார்கள். செய்த பாவகாரியங்களுக்கு ஏற்ப என்னவெல்லாம் தண்டனைகள் அங்கு வழங்கப்படும் என்று புத்தமதத்தில் சொல்லப்பட்டுள்ளதோ அதை விளக்கும் வகையில் வண்ணமயமான பொம்மைகளால் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த பொம்மைகள் சிமெண்ட், ப்ளாஸ்டர், பெயிண்ட் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மைகள் காட்சிகளுக்கு ஏற்ற சூழலை பிரதிபலிக்கும் விதத்தில் தத்ரூபமாகவும் அதன் கண்கள் உயிரோட்டமாகவும் செய்நேர்த்தியுடன் நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், வந்து பார்ப்பவர்கள் ரசித்து வியக்கின்றனர். இந்த தோட்டத்தில் பல வாசகங்கள் இடம்பெற்றுள்ளன அதில் ஒன்று ‘இந்த வாழ்க்கையில் பேயை சந்திக்க நேர்ந்தால், அந்த தகுதி உருவாக்க வாய்ப்பை தள்ளிப்போடாதீர்கள் அது உங்களுக்கு அடுத்த வாழ்க்கையில் அந்த பேயை தோற்கடிக்க பயன்படும்’ என்று உள்ளது. விஸ்வரூபமான ஆண் மற்றும் பெண் உருவம் தனது நீண்ட நாக்கை தொங்கபோட்டபடி பாவிகள் ரத்தத்தை குடிக்க நிற்பதுபோலவும், அதன் காலடியில் பாவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது போலவும் ஒரு காட்சி உள்ளது. அதுபோல, ரம்பத்தால் பாவிகளை துண்டாக அறுப்பது, பெரிய எண்ணெய் கடாயில் பாவிகளை நிரப்பி கீழே நெருப்புமூட்டி வேகவைப்பது, கோடாரியால் பாவிகள் மண்டையை பிளப்பது, நெஞ்சை பிளப்பது, நெஞ்சிலும் முதுகிலும் கருவிகொண்டு துளையிடுவது, மிருகங்களை விட்டு கடிக்க செய்வது, கழுவில் ஏற்றுவது, உராயும் மரத்தில் ஏறவிட்டு பின்னால் ஈட்டியால் குத்துவது, பாம்பு, பூனை, நாய்களை விட்டு கடிக்கவிடுவது. பாலியலில் துரோகம் செய்தவர்களுக்கு அதற்குரிய உறுப்புகளை ஈட்டியால் குத்தி சிதைப்பது. பொய்பேசி கேடு விளைவித்தவர்களுக்கு நாக்கை துளையிடுவது. குடலை உருவி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக்குவது என பார்த்தாலே பிறருக்கு தீங்கு செய்ய நமக்கு பயம் ஏற்படும் அளவில் அமைக்கப்பட்டுள்ளன. தீங்கு செய்ய பயம் வருவதற்காகத்தான் மதங்களின் இந்த நரக கண்டுபிடிப்பும் அதை மக்களிடையே பரப்பும் இந்த வடிவமைப்பு முயற்சியும் பாராட்டத்தக்கது ஆகும். ஆனாலும், மதநம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் இருப்பதாக சொல்லிக்கொள்பவர்கள், தீங்கு செய்யும்போது மட்டும் அதன் அச்சுறுத்தலை எப்படி அசட்டை செய்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.