இன்டெர்ன்ஷிப் இளைஞர்களுக்கு ஸ்டைஃபண்டு உயர்வு: இன்ஃபோசிஸ் திட்டம்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், இன்டெர்ன்ஷிப்புக்கு திறமையான இளைஞர்களைக் கவர்வதற்காக ஸ்டைஃபண்டுகளை அதிகரிப்பதாக முடிவு செய்துள்ளது.
பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான இளைஞர்களை தங்கள் நிறுவனத்திற்குள் கவர்வதற்காக சம்பளத்தை உயர்த்த முடிவு செய்தது. ஆனால் இன்ஃபோசிஸ் சற்று வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.
நியூயார்க்கில் நடந்த சிட்டி குளோபல் டெக்னாலஜி கான்ஃபரன்ஸில் பேசிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி யு பி பிரவின் ராவ், "நாங்கள் ஒரு வித்தியாசமான முயற்சியை திட்டமிட்டுள்ளோம். புதிதாக வேலைக்கு வருவோரின் ஈட்டுத்தொகையை அதிகரிக்கவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகையை இன்டெர்ன்ஷிப் திட்டங்களுக்காகத் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் அது எங்களுடன் சேரும் இளைஞர்களுடன் வலுவான இணைப்பை ஏற்படுத்தும்," என்றார்.
தகவல் தொழில்நுட்ப துறையின் ஏற்றுமதி சேவைகள் தொடர்ந்து வளர்ந்து வரும்போதும், இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை கடந்த 8-10 வருடங்களாக ஆண்டுக்கு ரூ. 3-3.25 லட்சம் என்ற அளவில்தான் கொடுத்து வருகிறது. ஆனாலும் டிசிஎஸ் உட்பட பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் 10-12% ஆட்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இன்ஃபோசிஸில் தற்போது உலகம் முழுவதுமுள்ள 100 அலுவலகங்களில் 1,79,523 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.