ஸ்ட்ராபெர்ரி படம் எப்படி
தனிமனிதர்களின் பணவெறிக்காகவும் சில நிறுவனங்களின் வெற்றிக்காகவும் சமுதாயத்தில் நடக்கிற அவலங்களைச் சுட்டிக்காட்டும் படம்.
அதன்விளைவாக உயிரையே இழக்கிற அப்பாவிகளுக்கான நியாயத்தை அவர்களே ஆவியாக வந்தால்தான் பெறமுடியும் என்று சொல்லுகிற படங்களின் வரிசையில் சேரக்கூடிய படம்.
பாடலாசிரியராகப் புகழ்பெற்ற பா.விஜய் எழுதி இயக்கியதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். வாடகைவண்டி ஓட்டுநராக நடித்திருக்கும் அவர், அப்பாவி போலத் தெரியவேண்டும் என்று நினைத்து நடித்திருக்கிறார். பல இடங்களில் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் அவ்னிமோடி, தன் உடல்பாகங்களைத் தாராளமாக ரசிகர்களுக்குக் காட்டிவிட்டு பா.விஜய்யோடு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் நடித்து வழக்கமான தமிழ்த்திரைப்படநாயகிகள் வரிசையில் நின்றுகொண்டார்.
சமுத்திரக்கனி தேவயானி தம்பதியினர் நடிப்பு நன்று. பொறுப்பான தந்தையின் போராட்டத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.
ஒரு இடைவெளிக்குப் பின்னால் திரையில் தேவயானி வருகிறார். பாசமான அம்மா பாத்திரத்துக்குக் கச்சிதாகப் பொருந்தியிருக்கிறார். அந்தத் தம்பதியினருக்கு ஏற்படுவது போன்ற கொடுமை யாருக்கும் வரக்கூடாது.
படத்தில் முக்கியப்பங்காற்றியிருக்கிறது குழந்தை. அக்குழந்தை வருகிற காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. இப்படித்தான் நம் ஊர் என்று இருக்கிறது என்று நினைக்கும்போது பயம் வருகிறது.
ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தம்பிராமய்யா, மயில்சாமி ஆகியோர் கொஞ்சநேரமே வந்தாலும் சிரிக்கவைக்கிறார்கள். ஜோமல்லூரி கெட்டவராக நடிக்கிறார் என்று தனியாகச் சொல்லத்தேவை இல்லாமல் அவருடைய உருவத்திலேயே அதைச் சொல்லிவிடுகிறார்கள்.
இயக்குநர்களான சுப்பிரமணியசிவா, ஜீவன் ஆகியோரையும் நடிக்கவைத்திருக்கிறார் பா.விஜய். அவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
பேய்ப்படம் என்பதால் ரசிகர்களைப் பயமுறுத்தியே ஆகவேண்டும் என்பற்காக அமைக்கப்பட்டிருக்கிற காட்சிகள் பார்த்துச் சலித்த பழையகாட்சிகள்.
தொடக்கத்தில் பயமுறுத்திய பேய், அது யார்? அதன் நோக்கம் என்ன? என்று தெரிந்தவுடன் அது பேயாகவாவது இப்படியே இருந்துவிடக்கூடாதா என்று எண்ணவைத்துவிட்டது.
பேய்ப்படம் என்று சொல்லிவிட்டதால் எப்படி வேண்டுமானாலும் கதை சொல்லலாம் என்று முடிவுசெய்துவிட்டதால் தன்னிஷ்டத்துக்குப் போகிறது திரைக்கதை.
ஒருவரைப் பழிவாங்க பேய்க்கு மனிதரின் தேவை இருக்கிறது, பேயைக் கட்டுப்படுத்தித் தன் வசம் வைத்துக்கொள்வது என்று விதவிதமாகக் கதை சொல்கிறார்கள்.
படத்தின் பெயரை நியாயப்படுத்த வருகிற ஓரிரு காட்சிகளில் வருகிற வண்ணத்துப்பூச்சி கடைசியில் எதிர்பாராத இடத்தில் திரைக்கதைக்கும் பலமாக அமைந்திருப்பது தெரிந்ததென்றாலும் நன்று.
பாடலாசிரியர் இயக்கியிருக்கும் படத்தில் பாடல்கள் பெரிதாக இல்லை என்பது சோகம். சண்டேக்கும் மண்டேக்கும் சண்டை என்று ஓசைக்காக பொருளே இல்லாத பாடலை எழுதியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
பேய்ப்படங்களுக்கான பின்னணிஇசையைக் கொஞ்சமும் மாற்றமில்லாமல் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.
கல்வி வியாபாரமாகிவிட்டதையும் மனப்பாடமும் மதிப்பெண்களும் முக்கியம் என்று நினைக்கிற கல்விமுறையையும் கடுமையாக விமர்சிக்கவேண்டும் என்று நினைத்த இயக்குநர் பா.விஜய்யின் எண்ணம் வரவேற்புக்குரியது. ஆனால் அந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் நிறைவாக இல்லை.