ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன்
ஏழை மாணவர்களுக்கு தில்லி அரசு
வழங்கும் கல்விக்கடன்
கல்வியைத் தொடர விரும்பும் ஏழை
மாணவர்களுக்கு தில்லி அரசின் மூலம் செப்டம்பர் 8-ம் தேதி முதல் கல்விக் கடன்
வழங்கப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
சிஒய்எஸ்எஸ் சார்பில் தேர்தல்
பிரசாரத்தை தொடங்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தில்லி தால்கடோரா
மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு "டியு ராக்' எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது:
கல்வியைத் தொடர்வதில் எந்த
மாணவருக்கும் பிரச்னை இருக்கக் கூடாது என்பது தில்லி அரசின் நோக்கமாகும். அவ்வாறு
பிரச்னை இருந்தால் அதற்குத் தீர்வளிக்கும் உத்தரவாதத்தை தில்லி அரசு அளிக்கும்.
அதாவது, மாணவர்கள் தங்களது உயர் கல்வியைத் தொடர்வதற்கான கல்விக் கடனாக ரூ.10
லட்சம் வரை வழங்குவதற்கு வங்கிக்கு தில்லி அரசு உத்தரவாதம் அளிக்கும். இதன்படி,
தில்லியில் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்
என்றார் மணீஷ் சிசோடியா.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பேசுகையில், தில்லியில் அனைத்துக் கல்லூரிகளிலும் இலவசமாக வைஃபை (இணையச் சேவை)
வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், பொதுமக்களின் உதவியுடன்
தில்லியை இந்தியாவிலேயே இலவச வைஃபை சேவை அளிக்கும் முதல் மாநிலமாக உருவாக்க
முடியும்' என்றார்.
தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்
தேர்தலில் சிஒய்எஸ்எஸ் முதல் முறையாக போட்டியிடுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின்
இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ), பாஜகவின் அகில பாரதிய வித்யார்த்தி
பரிஷத் (ஏபிவிபி) ஆகியவற்றின் கடும் போட்டியை சிஒஎஸ்எஸ் எதிர்கொள்ளும் நிலை
உள்ளது.