கிருமி - பட விமர்சனம்







ஊரில் நடக்கிற குற்றங்களைப் பற்றிக் காவல்துறைக்குத் துப்புக்கொடுப்பவர்களை இன்பார்மர்கள் என்று சொல்வார்கள். அவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் கிருமி.  ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பும் பொறுப்பில்லாமல் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் கதாநாயகன் கதிருக்கு, ஏறகெனவே இன்பார்மராக இருக்கும் ஒருவர் மூலம் காவல்துறையினரின் அறிமுகம் கிடைக்கிறது. சாலைகளில் தான்தோன்றித்தனமாக நிறுத்தப்படுகிற வாகனங்களை தூக்கி வாகனத்தில் ஏற்றுவது, காவல்துறைக்காக நடைபாதைக்கடைக்காரர்களிடம் மாமூல் வாங்குவது போன்ற செயல்களைச் செய்கிறார் கதிர். சும்மா சுற்றிக்கொண்டிருந்தவருக்குக் காவல்துறைவாகனத்தில் பயணம் செயவதே மிகப்பெரிய கவுரவமாக இருக்கிறது. நாம் இருப்பது, செய்வது ஆகியவை மிகவும் ஆபத்தான இடம் என்பதை உணராமல் அவர் செய்யும் செயலால் இவருக்கு வேலைகிடைக்கக் காரணமாக இருந்த இன்பார்மர் கொலைசெய்யப்படுகிறார். அதன்பின் இவர் என்ன செய்கிறார் என்பதுதான் படம்.  நாயகனாக நடித்திருக்கும் கதிர், தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். நண்பர்களிடம் கோபித்துக்கொள்வதும், ரவுடியிடம் அடிவாங்கி அவமானத்தில் குறுகுவதும் நன்றாகச் செய்திருக்கிறார். மனைவியாக நடித்திருக்கும் நாயகி ரேஷ்மிமேனன், அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறார். கணவன் பொறுப்பற்று இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் மேல் அன்பாகவே இருக்கும் இப்படி ஒரு மனைவி அமைந்தால் எல்லோருக்கும் நல்லது. சார்லிக்கு நீண்டஇடைவெளிக்குப் பின் நல்லவேடம் அமைந்திருக்கிறது. பொருத்தமாக இருக்கிறார். தான் இருக்கும் இடம், செய்யும் வேலை ஆகியனவற்றை உணர்ந்திருப்பதை நடிப்பில் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் டேவிட், மாரிமுத்து ஆகியோரும் சரியாக நடித்து அந்த வேடத்துக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள். நாயகனின் நண்பராக வருகிற யோகிபாபு சிரிக்கவைக்கிறார். சார்லியின் மனைவியாக நடித்திருபபவரும் கவனிக்கவைத்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை,திரைக்கதையை காக்காமுட்டை மணிகண்டனும் இயக்குநர் அனுசரணும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.  படத்தில் வருகிற காவல்நிலையக்காட்சிகள் மிக எதார்த்தமாக இருக்கின்றன. காவல்துறையும் ரவுடிகளும் வெவ்வேறல்ல அவை இரண்டும் இணைந்து இயங்கக்கூடிய ஒரே அமைப்பு, இது புரியாமல் இதற்குள் சிக்கிக்கொள்பவர்களை எச்சரிக்கும் விதமாக இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள் போலும். ஒளிப்பதிவாளர் அருள்வின்சென்டின் ஒளிப்பதிவு படத்தை இயல்பாகக் காட்ட உதவியிருக்கிறது.  படத்தொகுப்பு செய்து இயக்கியிருக்கும் அனுசரண், முதல்படம் என்கிற பொறுப்பை உணர்ந்து எடுத்திருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பெயரில் அவர் சொல்லவந்திருக்கிற விசயம் ரசிகர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேருமா என்பது சந்தேகம்தான். எடுத்துக்கொண்ட விசயத்தைச் சரியாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.  கடைசிக்காட்சி பொருத்தமாக அமையவில்லை, எதார்த்தம் என்றால் நாயகன் உயிருடன் இருந்திருக்கமுடியாது, திரைப்படநாயகன் என்றால், வில்லன்கள் உயிருடன் இருந்திருக்கக்கூடாது, இரண்டும் இல்லாமல் நாயகன் இயல்பு வாழ்க்கை வாழ்கிறார், அதை அவரால் சிக்கலுக்குள்ளானவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எதார்த்தத்தில் நடக்குமா? 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad