'கண்டக்டருக்கு முன் ரஜினிகாந்த் செய்த வேலை'
ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித்
தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று பிரபல திரைப்பட இயக்குனர்
எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கவிஞர் பரமசிவன் எழுதிய 'ஒரு
தமிழ்க் கவிஞனின் ஆங்கில பாடல்கள்' என்ற நூல் வெளியீட்டு விழாவில்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர்
எஸ்.பி.முத்துராமன், "சினிமாவில் நடிப்பதற்கு முன் ஒரு வேளை
சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அதனால்தான், அவர் தமிழக
முதல்வரான பின் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
இதேபோல், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஆரம்ப
காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டவர்கள். அவர்களது கடின உழைப்பு, திறமை,
புத்திசாலித்தனத்தால் சினிமாவில் சாதனை படைத்தனர்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ரஜினிகாந்த் கண்டக்டர் வேலை செய்து
கொண்டிருந்தார் என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். உண்மையில் ரஜினி
கண்டக்டர் வேலைக்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
இதை அவரே என்னிடம் சொன்னார். ரஜினியை வைத்து ஒரு படம்
எடுத்தபோது, அவர் நடிக்க வேண்டிய காட்சியை முடித்து விட்டு, அரிசி
ஆலையில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மீது படுத்து
தூங்கிவிட்டார்.
இதற்கிடையே வேறொரு காட்சி எடுத்து முடித்து விட்டு ரஜினி நடிக்க
வேண்டிய காட்சிக்காக தேடியபோது, அவர் நெல் மூட்டை மீது தூங்குவதை
அறிந்து எழுப்பினேன். நெல் மூட்டை மீது படுத்தால் உடம்பு அரிக்காதா? என
கேட்டேன். அதற்கு அவர், நான் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும்
கூலி வேலை செய்தேன், அதனால் எனக்கு உடம்பு அரிப்பெல்லாம்
பழக்கமாகி விட்டது என கூலாக சொன்னார்" என்றார்.