பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக கங்குலி தேர்வு: முதல்வர் மம்தா அறிவிப்பு
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (சி.ஏ.பி.) தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா, சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் பி.சி.சி.ஐ.,க்கு புதிய தலைவரை தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதிலும் குழப்பம் நிலவியது. இதற்கிடையே கங்குலி, மறைந்த டால்மியா மகன் அவிஷேக்குடன் இணைந்து முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இதையடுத்து , நேற்று கல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, சி.ஏ.பி. தலைவராக கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அடுத்த மாதம் நடக்கும் சிறப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கங்குலி, தலைவர் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கங்குலி கூறுகையில், என்மீது நம்பிக்கை வைத்து சி.ஏ.பி., தலைவராக செயல்பட அனுமதி தந்தது மகிழ்ச்சி. அனைவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவேன். இது மிகவும் சவாலான பணி என்று தெரிவித்துள்ளார்.