600 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம்: பீதியிலே பயணிக்கும் சுற்றுலா பயணிகள்
சீனாவில் உயரமான இரண்டு மலை உச்சிகளை இணைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை சுற்றுலா பயணிகள் பீதியுடனே கடக்கும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுனான் பகுதியில் உள்ளது ஷினுஷாய் தாவரவியல் பூங்கா. இங்குள்ள Stone Budha எனப்படும் மலையின் இரு உச்சிகளை இணைப்பதற்காக 590 அடி உயரத்தில் மரப்பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் முழுக்க முழுக்க கண்ணாடியினாலான பாலம் தற்போது அங்கு கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளில் பயன்பாட்டிற்காக நேற்று அந்த கண்ணாடி பாலம் திறந்துவிடப்பட்டது. இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கண்ணாடி வீட்டின் ஜன்னலில் பயன்படுத்தப்படும் கண்ணாடியை விட 25 சதவீதம் உறுதியானது என்று பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 அடி உயரத்தில் முழுவதும் கண்ணாடியினால் ஆன அந்த பாலத்தை பலரும் பீதியுடனேயே கடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.