தனிஒருவன் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ 3 கோடி ஃபைன்?
ஜெயம்ரவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் தனி ஒருவன். நயன்தாரா நாயகியாக நடிக்க, ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைத்திருந்தார். படத்தினை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது.
தனிஒருவன் படத்திற்காக அதிகப்படியான விளம்பரங்கள் செய்ததால், ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்குத் தயாரிப்பாளர் சங்கம் தடை (ரெட்) விதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தனிஒருவன் வெளியாகும் போதும், வெளியான பிறகும் தொலைகாட்சிகள், வானெலி, எப்.எம்கள், இணையம் என்று அனைத்திலும் அதிகப்படியாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சில தினசரி மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டும் தான் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதை மீறி விளம்பரம் செய்ததாக ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு அந்நிறுவனத்திற்கு ரெட் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, “ ஏ.ஜி.எஸ். நிறுவனம் தொடர்ச்சியாக படங்களைத் தயாரிக்க தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் இப்படி டிவிட் செய்திருந்தாலும் அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டோ, அல்லது படங்களைத் தயாரிக்கக் கூடாது என்று சொல்லியோ எந்தக் கடிதமும் வரவில்லையாம். இன்னொருபக்கம், தயாரிப்பாளர்கள்சங்க முடிவை மீறியதற்காக 3 கோடி ரூபாய் ஃபைன் கட்டவேண்டும் என்று சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.