ஒரே ஆண்டில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று லியாண்டர் சாதனை!
அமெரிக்க ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. விம்பிள்டனை தொடர்ந்து அமெரிக்க ஓபனிலும் பட்டம் வென்றுள்ள லியாண்டருக்கு தற்போது 42 வயதாகிறது.
அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவின் சாம் கியூரே, பெதானி இணையை லியாண்டர் இணை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை 6-4 என்று லியாண்டர் இணை கைப்பற்றியது. 2வது செட்டை அமெரிக்க ஜோடி வென்றாலும் 3வது செட்டை 10-7 என்ற கணக்கில் லியாண்டர் பயஸ்- மார்ட்டினா ஜோடி வென்று பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆண்டில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை லியாண்டர் பயஸ் -மார்ட்டினா ஜோடி வென்றிருந்தது. இது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். கடந்த 1969ஆம் ஆண்டுக்கு பிறகு கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரே ஆண்டில் ஒரே இணை 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வது இதுவே முதல் முறை.
லியாண்டர் பயசை பொறுத்த வரை இது 9வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். மார்ட்டினாவுக்கு இது 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் . நாளை நடைபெறவுள்ள மகளிர் இரட்டையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை சானியா மிர்ஷா இணையை எதிர்கொள்கிறது.