தீபாவளிக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்! விலை 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்!
ராயல் என்ஃபீல்டு புல்லட், தண்டர்பேர்டு பைக்குகளைத் தாண்டி ஸ்டைலான பைக்குகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறது. கடந்த ஆண்டு கஃபே ரேஸர் பைக்காக கான்ட்டினென்ட்டல் ஜிடி பைக் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்துகிறது ராயல் என்ஃபீல்டு.
ஹிமாலயன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக்கின் ஸ்பை படங்களை முதன்முதலில் வெளியிட்டது மோட்டார் விகடன்தான். மீண்டும் மோட்டார் விகடன் வாசகர் டோலி ஆஸ்ட்டினின் கேமெராவில் சிக்கியிருக்கிறது ஹிமாலயன்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரிங் பைக்கில் புதிய 410 சிசி சிலிண்டர் இன்ஜின் உள்ளது. கான்டினென்ட்டல் ஜிடி பைக்கின் ஹெட்லைட்ஸ், முன்பக்க சஸ்பென்ஷன், எக்ஸாஸ்டைக் கொண்டுள்ளது ஹிமாலயன். ஆனால் கான்டினென்ட்டல் ஜிடியில் இருந்த டபுள் சஸ்பென்ஷனுக்கு பதிலாக மோனோஷாக் சஸ்பென்ஷன் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க டயர் பெரியதாக இருக்கிறது. இரண்டு வீல்களிலுமே டிஸ்க் பிரேக் உள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக விற்பனைக்கு வர இருக்கிறது ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரர். விலை 2.50 லட்சம் ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 லட்சம் ரூபாய்க்குள் இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வர ராயல் என்ஃபீல்டு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.