11 ஆண்டுகள் கோமா வாழ்க்கை: விழித்தெழுந்து பெடரர் பற்றி அறிந்தவுடன் ஆச்சரியமடைந்த ரசிகர்
11 ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்ட ரோஜர் பெடரின் ரசிகர் ஒருவர், தனது ஹீரோ இன்னும் விளையாடிக்கொண்டிருப்பதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜீசஸ் அபாரிசியோ என்பவர் கார் விபத்தில் சிக்கி கோமாவில் வீழ்ந்தார். அந்த ஆண்டில்தான் பெடரர் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி கோமாவிலிருந்து கண் விழித்தார் ஜீஸச் தன் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும், தன் குடும்பத்தினர், நண்பர்கள், நாட்டு நடப்பு, உலக விவகாரம் ஆகியவற்றை கேட்டறிந்ததோடு, தனது ஹீரோ ரோஜர் பெடரர் பற்றியும் கேட்டறிந்தார். பெடரர் ஓய்வு பெற்றிருப்பார் என்றே நினைத்தேன். ஆனால் 34 வயதில் அவர் இன்னமும் விளையாடி வருகிறார், அதுவும் உலகின் தலைசிறந்த 2-ம் வீரர் இடத்தில் இருக்கிறார் என்பதையும் கேட்டறிந்த போது, என்னால் நம்ப முடியவில்லை. அவர் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்று கேள்விப்பட்டவுடன் என் கைகள் என் முகத்திற்குச் சென்றது. பெடரர் மிகச்சிறந்த வீரர் என்பதை நான் அறிவேன். ஆனால், அவர் இவ்வளவு சாதனைகள் புரிந்திருப்பார் என்பதை நான் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் ஓய்வு பெறுவதற்கு முன் அவரது ஆட்டத்தை பார்த்து விடுவேன், ஒருவேளை அது அவரது 18-வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.