பணம்தான் முக்கியம்: சரத் அதிர்ச்சி பேச்சு !
ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை அமைப்பு வேலை வாய்ப்பு முகாம் ஒன்றை அண்மையில் நடத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக சரத்குமார் கலந்து கொண்டதுடன் பத்து லட்ச ரூபாய் நன்கொடையும் வழங்கினார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது... தன் ஆரம்பகால பள்ளி, கல்லூரி வாழ்க்கையைப் பற்றியெல்லாம் நினைவு கூர்ந்தார். தன்னை இருபது வயது இளைஞர் என்றார். பெயருக்குப் பின்னே போட, ஏதாவது ஒரு டிகிரி தேவை என்றார். பி.எஸ்.ஸி படித்து விட்டு பெங்களூரில் சைக்கிள் பாயாக வீட்டுக்கு வீடு பேப்பர் போட்டதை எல்லாம் கூறியவர் இளைஞர்களிடம், பணம்தான் முக்கியம் என்றார். டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் குறிக்கோளான விஷன் 2020 அடைவது நம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது. மாணவர்கள் தான் இந்நாட்டின் விதையின் உயிர்நாடி. என்னுடைய வாழ்க்கையில் மூன்று ஈ(E) க்களை முக்கியமானதாக கருதுகிறேன். அதாவது கல்வி (Education), வேலைவாய்ப்பு (Employment), அதிகாரம் (Empowerment). இந்த வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும். ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 70 சதவீதம் 100 மதிப்பெண்கள் பெறுவதால், வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது அரிதாகிறது. இக்காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை முறியடித்து தைரியமாக துணிந்து வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். உங்களின் கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும். மகாத்மா காந்தி சொன்னபடி எந்த வேலை என்றாலும் தன்மானத்தோடு ஏற்றுக்கொண்டு அதன் பின் நம் குறிக்கோளை எட்டிப்பிடிக்க வேண்டும். இன்றைய சூழலில் பணம் தான் முக்கியம். அது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இதுதான் யதார்த்தம், உலக நடப்பு எல்லாமே, இதை மறந்துவிட வேண்டாம்" என்றார்.