தோல்விக்கு என்ன காரணம்: விராத் கோஹ்லி விளக்கம் !
‘‘இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் கண்ட தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் முக்கிய காரணம்,’’ என, இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கூறினார். இலங்கைக்கு எதிராக காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தி்ல தோல்வி அடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 2வது இன்னிங்சில் அப்படியே படுத்தது.
இதுகுறித்து இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கூறியது: காலே டெஸ்டில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்சில் பேட்ஸ்மேன்கள் சோபிக்காததால் தோல்வி அடைந்தோம். ஐந்து பவுலர்களுடன் விளையாட முடிவு செய்துவிட்டு, பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடினால் தோல்வியை சந்திக்க நேரிடும். இதற்காக கூடுதல் பேட்ஸ்மேனை சேர்க்க வேண்டும் எனக் கூற மாட்டேன்.
எதிரிணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்களது திட்டம். இதற்கேற்ப பவுலர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இப்போட்டி பேட்ஸ்மேன்களுக்கு நல்ல பாடமாக அமைந்தது. நெருக்கடியான நேரத்தில் சுழற்பந்துவீச்சை சமாளிப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மீதமுள்ள போட்டிகளில் எழுச்சி கண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும்.
அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறை இத்தொடரில் கிடையாது. எனவே இதுகுறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இத்தொடருக்கு பின், இதன் முக்கியத்துவம் குறித்து அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இத்தோல்விக்கு அம்பயரின் சில தவறான தீர்ப்புகள் மற்றும் டி.ஆர்.எஸ்., முறையை பயன்படுத்தாதது போன்றவற்றை காரணமாக கூற விரும்பவில்லை. இரண்டாவது இன்னிங்சில் மோசமாக விளையாடியது தான் காரணம்.