பயங்கரவாதிகளை பந்தாடிய ஹாக்கி நட்சத்திரங்கள் !
இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர்கள் ஜுக்ராஜ் சிங், தல்ஜித் தில்லான், பல்ஜித் தில்லான் இணைந்து பஞ்சாப்பில் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்திய ஹாக்கி அணியின் முன்னாளர் வீரர் ஜுக்ராஜ் சிங், 32. சிறந்த முன்கள வீரர். ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் ஸ்பெஷலிஸ்ட்’. இவரது 20 வயதில் (2003) ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். பின் தொடர்ந்து ஹாக்கி விளையாட முடியாததால், பஞ்சாப் போலீசில் இணைந்தார். தற்போது அமிர்தசரஸ் மாவட்டத்தில் டி.எஸ்.பி., (விசாரணை பிரிவு) உள்ளார்.முன்னாள் இந்திய அணி கேப்டன் பல்ஜித் , 41, (ஹோசியாபுர் எஸ்.பி.,), இவரது சகோதரர் தல்ஜித் தில்லான் , 35. (டி.எஸ்.பி., கபுர்தலா) என இருவரும் பஞ்சாப் போலீசில் தான் பணியாற்றுகின்றனர். சமீபத்தில் இங்குள்ள குர்தாஸ்பூர் போலீஸ் ஸ்டேஷன், பேருந்து நிலையத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது சக போலீசாருடன் இணைந்து, இந்த மூன்று முன்னாள் ஹாக்கி வீரர்களும் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர். 12 மணி நேரம் நடந்த பயங்கர சண்டையில் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பல்ஜித் சிங் கூறுகையில்,‘‘ நெருக்கடியான சூழ்நிலையில் தேசத்திற்காக சாதிக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் தான். இந்த தாக்குதல் சம்பவத்தில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. இதற்கான வாய்ப்பு தந்த பஞ்சாப் போலீசிற்கு நன்றி,’’ என்றார்.