தனி ஒருவன் - விமர்சனம்
தனி ஒருவன் - விமர்சனம்
ரோமியோ ஜூலியட், சகலகலா வல்லவன் படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்திருக்கிறது ‘தனி ஒருவன்’. முதல்முறையாக வில்லனாக இப்படத்தில் களமிறங்கியிருக்கிறார் அர்விந்த் சுவாமி.
தனது 15 வயதில் தன் அப்பா தம்பி ராமையாவை எம்.எல்.ஏ. ஆக்குவதற்காக கொலைப்பழியை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார் அர்விந்த் சுவாமி. அதன்பிறகு வெளியே வந்து படித்து பெரிய ஆளாகி சயின்டிஸ்ட்டாக மாறும் அர்விந்த் சுவாமி, தனது புத்திசாலிதனத்தின் மூலம் கெட்ட வழிகளில் பணம் சம்பாதித்து சர்வதேச அளவிலான குற்றவாளிகளுடன் தொடர்பு வைக்கிறார். இன்னொருபுறம் சின்னச் சின்ன குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறுகிறார் ஜெயம் ரவி.
தீமைக்கும், நன்மைக்கும் இடையே ஆரம்பமாகிறது யுத்தம். இந்த யுத்தத்தின் இறுதியில் வழக்கம்போல் நன்மைதான் வெல்லும் எனத் தெரிந்தாலும், ஹீரோ வில்லனை எப்படி வீழ்த்துகிறார் என்பதற்கான சுவாரஸ்யமான பக்கங்கள்தான் ‘தனி ஒருவன்’.
படம் பற்றிய அலசல்
தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் புதிய ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மோகன் ராஜாவாக மாறியிருக்கும் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா. இந்தியாவில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் பின்னணியில் நிகழும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், ஆள் கடத்தல்கள் என புதிய கோணத்தில் கொஞ்சம் விலாவாரியாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
முன் பாதியில் ஒரு பாடல், பின்பாதியில் ஒரு பாடல் என இரண்டே பாடல்களை ‘நச்’சென கொடுத்திருக்கிறார் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. பின்னணி இசையில் படம் முழுக்க ‘தீமைதான் வெல்லும்’ பாடலையே பயன்படுத்தியிருக்கிறார்.
பலம்
1. அர்விந்த் சுவாமியின் அசத்தலான நடிப்பு.
2.படத்தை போரடிக்காமல் நகர்த்தியிருக்கும் திரைக்கதை.
3. கதாபாத்திர வடிவமைப்பு.
ஒரு போலீஸ் கதையாக, ஒரு சமூக கருத்தை சொல்லும் கதையாக, ஹீரோ வில்லனுக்கிடையே நடக்கும் மோதல் கதையாக ‘தனி ஒருவன்’ படமும் ஏற்கெனவே தமிழில் பலமுறை சொல்லப்பட்ட ஒரு கதைதான். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்த விதத்தில் தனித்து நிற்கிறது இப்படம்.