சானியாவுக்கு ‘கேல் ரத்னா’ !
நாட்டின் உயரிய ‘கேல் ரத்னா’ விருது சானியா மிர்சாவுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் ‘நம்பர்–1’ டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 29. சமீபத்திய விம்பிள்டன் கிராண்ட்லாம் தொடரில் சுவிட்சர்லாந்தின் ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்றார். ஒட்டுமொத்தமாக, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையர் (1) மற்றும் கலப்பு இரட்டையர் (3) பிரிவில் இதுவரை 4 பட்டங்கள் வென்றுள்ளார்.
இவரின் சாதனையை பாராட்டும் விதமாக ‘கேல் ரத்னா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். விகாஸ் கவுடா (வட்டு எறிதல்), டிண்டு லுாகா (தடகளம், 800 மீ.,), தீபிகா பல்லீகல் (ஸ்குவாஷ்) உள்ளிட்டோரும் இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். இந்நிலையில், ‘கேல் ரத்னா’ விருது கமிட்டி சானியாவின் பெயரை இறுதி செய்துள்ளது. இது, மத்திய விளையாட்டுத்துறையின் ஒப்பதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஒப்புதலுக்குப்பின் வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
சானியாவை பொறுத்தவரை ‘கேல் ரத்னா’ விருது பெறும் இரண்டாவது டென்னிஸ் நட்சத்திரமாகிறார். இதற்கு முன் பயஸ் (1973) இவ்விருதை வென்றார். ஏற்கனவே சானியா, அர்ஜூனா (2004), பத்ம ஸ்ரீ (2006) விருதுகளை பெற்றுள்ளார். கேல் ரத்னா விருதுக்கான பதக்கத்துடன், ரூ. 7.50 லட்சம் பரிசாக வழங்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆக.,29ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதை வழங்குவார்.