"அப்பாடக்கர்" சகலகலா வல்லவன் - விமர்சனம்
பதிலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான ஜெயம் ரவியின் அத்தை மகள் த்ரிஷாவை, ஒருதலையாக காதலிக்கும் சூரிக்கு உதவுவதற்காக திருமணத்தை நிறுத்த சென்னைக்கு வருகின்றனர் ரவியும், சூரியும்! அது முடியாமல் போகிறது! ஊரும், உறவும் திருமணத்திற்கு வந்து சேர்ந்த நிலையில், மணமேடையில் வைத்து போலீஸ் மாப்பிள்ளை ஜான் விஜய்யை போலி என்-கவுன்ட்டர் செய்த வழக்கில் கைது செய்து அழைத்து போகிறது போலீஸ். இதனால் நிலைகுலைந்து போகும் த்ரிஷாவின் அப்பா ராதாரவிக்கு ஆறுதல் கூறி, தன் மகன் ஜெயம் ரவியை அதே மேடையில் த்ரிஷா கழுத்தில் தாலிகட்ட சொல்கிறார் பிரபு! அப்பா சொல் தட்டாத பிள்ளையான ரவியும், அவ்வாறே செய்கிறார். அப்புறம்.? அப்புறமென்ன.? அஞ்சலி - ஜெயம் ரவியின் காதல் என்னாயிற்று..?, திருமணம் செய்து கொண்ட த்ரிஷா - ஜெயம் ரவியின் கல்யாண வாழ்க்கை, கலகலப்பாக சென்றதா.? இல்லையா..? சூரியின் சூழ்ச்சிகள் வீழ்ச்சியை சந்தித்தனவா.? ஜெயம் ரவிக்கு எதிராக வளர்ச்சி அடைந்தனவா.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காமெடியாகவும், கலர்புல்லாகவும் விடை சொல்ல முயன்றிருக்கிறது சகலகலா வல்லவன் படத்தின் மீதிக்கதையும் காட்சியமைப்புகளும்.
ஜெயம் ரவி, அப்பாடக்கர் ரவியாக, அப்பாவுக்கு அடங்கி நடக்கும் பிள்ளையாக அதேநேரம் காமெடி, ஆக்ஷ்ன், ரொமான்ஸ், சென்ட்டிமென்ட், சகலத்திலும் சக்கைபோடு போடும் ஹீரோவாக டாப் டக்கராக ஜொலித்திருக்கிறார். த்ரிஷா, அஞ்சலி இருநாயகியரில் முன்பாதி முழுவதையும், மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறார் அஞ்சலி என்றால், பின்பாதியைில் பிடிக்காத கணவன், குடும்ப சண்டை சச்சரவு, அதன்பின் உறவுகளை புரிதல்... என த்ரிஷா வியாபித்திருக்கிறார். ரசிகர்கள் நெஞ்சிலும் பெரிதாய் வியாபிப்பது த்ரிஷா தான். காரணம் அஞ்சலி, அஞ்சலியா.? நமீதாவா.? என ஆரம்ப காட்சிகளில் சந்தேகம் ஏற்படுமளவிற்கு சதை போட்டிருப்பது தான் பாவம்! சூரி செய்யும் சேட்டைகள் எல்லாம் சிரிப்பை வலிய வரவழைக்க முயன்று பல இடங்களில் கடுப்பையும், சில இடங்களில் சிரிப்பையும் தருகின்றன!
பிரபு, ராதாரவி, ஜான் விஜய், அஸ்வின், நான் கடவுள் ராஜேந்திரன், ரேகா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோரில் நான் கடவுள் ராஜேந்திரன், த்ரிஷா - ரவியின் குடும்ப சண்டையால் போலீஸ் வேலையை இழந்து பிச்சை எடுக்கும் காமெடி எபிசோட் சுவாரஸ்யம்! எஸ்.எஸ்.தமனின் இசையில் பாடல்களில் தெலுங்கு வாடை என்றாலும், செம குத்து! யூ.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு பலத்துடன், சுராஜின் எழுத்து, இயக்கத்தில் சகலகலா வல்லவன் டைட்டில் மட்டுமல்ல கதையும் பழசு என்றாலும் காமெடி ரவுசு!