விமர்சனம் - "நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்" !
வம்சம் மௌன குரு தொடங்கி டிமான்ட்டி காலனி வரை நடித்த நான்கைந்து படங்களிலும் படத்திற்கு படம் வித்தியாசமான பாத்திரங்கள், வித்தியாசமான கதைகள் என தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் படத்தையும் வித்தியாசமாக தேர்வு செய்திருக்கிறார். அந்த வித்தியாசம் கொஞ்சம் ஓவர் டோஸாகி சிரிப்பும், சிலேகிப்புமாக சென்ற முன்பாதி, ரசிகர்களை சீட்டின் நுனிக்கு அழைத்து வருவது, பின்பாதி வித்தியாசம் ரசிகர்களின் பொறுமையை சோதித்து சீட்டில் நௌிய வைப்பதும் தான் இப்படத்தின் பலம், பலவீனம் எனலாம்.
நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்தின் கதைப்படி, குற்றச்செயலே நடைபெறாத குக்கிராமம் ஒன்றின் காவல் நிலையத்தில் அருள்நிதி, சிங்கம் புலி, ராஜ்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட நால்வரும் முறையே கான்ஸ்டபிள், ஏட்டு, சப்-இன்ஸ், இத்யாதி இத்யாதிகளாக இருக்கிறார்கள். தங்க சங்கிலி தரையில் கிடந்தாலும் அதை இரண்டுநாள் கழித்து அதற்குரியவர் எடுத்து செல்வார், கடைகளில் காசை கல்லாவில் போட்டுவிட்டு தேவையானதை எடுத்து செல்லலாம்... திருட வந்தவனை அன்பாலேயே திருத்தி அந்த ஊரிலேயே அவன் வாழ வழி செய்து கொடுத்திருக்கும் நிலை... என சகல விஷயங்களிலும் எந்தவித குற்ற செயலும் நடைபெறாமல் இருக்கும் குக்கிராமத்தில், ஒருகாவல் நிலையம், அதனூள் நான்கு காவலர்கள் எனும் நிலையில், ஸ்டேஷன் உள்ளேயே டிவியில் கிரிக்கெட் பார்ப்பது, கேரம் விளையாடுவது, செஸ் விளையாடுவது... என ஊரில் உள்ளவர்களிடம் சேர்ந்து மாமன் மச்சான் உறவுமுறை பேசி செம ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர் அருள்நிதி உள்ளிட்ட நான்கு காவலர்களும். இந்நிலையில் குற்ற செயலே நடைபெறாத குக்கிராமத்திற்கு காவல் நிலையம் எதற்கு? என கேட்டு அந்த காவல் நிலையத்தை இழுத்து மூடிவிட்டு, வெட்டு-குத்து கொடிகட்டி பறக்கும் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு மாறுதல் உத்தரவு அனுப்புகின்றனர் உயர் அதிகாரிகள். நால்வருக்கும் சொந்த ஊரை விட்டு போக மனமில்லாமல் பெட்டி கேஸை பிடித்து வந்து பெரும் கேஸாக்க முயலுகின்றனர். அது முடியாது எனும் நிலையில், ஊருக்குள் திருட்டு புரட்டு என களமிறங்கும் நால்வரும், உச்சகட்டமாக போலீஸ் ஸ்டேஷனுக்கே பாம் வைத்து தங்கள் ஜாப்பை தக்க வைத்து கொண்டு ஜாகையையும் அந்த ஊரிலேயே நிரந்தரமாக வைத்து கொள்ள முயற்சிக்கின்றனர். நால்வருக்கும் ஆளாளுக்கு அந்த ஊரிலேயே இருக்க வேண்டிய அவசியமும், ஆசையும் இருக்கிறது.
நாயகர் அருள்நிதிக்கு அந்த ஊர் பள்ளி ஆசிரியை ரம்யா நம்பீசன் மீது காதல், அதை சொல்லப்போகும் வேளைகளில் எல்லாம் பாழாய் போன பகல் கனவு வந்து பாடாய்படுத்தி விடுகிறது மனிதரை. அந்த காதலை எப்படியாவது வௌிப்படுத்தி ரம்யாவை கைப்பிடிக்க வேண்டும் என்பது அருள்நிதியின் லட்சிய கனவு. ஆதலால் அந்த ஊரிலேயே இருக்க விரும்புகிறார். அருள்நிதியின் லட்சிய கனவு நிறைவேறியதா.?, அல்லது பகல் கனவு பலிக்காமல் போனதா..? எனும் கதையுடன், இந்த நால்வரும் அந்த ஊர் காவல் நிலையத்திலேயே இருக்க விரும்பி செய்யும் சேட்டைகளால் ஏற்படும் விபரீத விளைவுகளையும் கலந்து கட்டி, எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் தீர யோசித்து செய்வது நல்லது எனும் மெஸேஜையும் சொல்லி முடிகிறது நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படம் மொத்தமும்! கான்ஸ்டபிள் சண்முக பாண்டியனாக துறுதுறு விழிகள், விறுவிறு நடை உடை பாவனை, நல்ல நடிப்பு... என வழக்கம் போலவே அருள்நிதி தான் ஏற்று கொண்ட பாத்திரத்திற்கு செம தினி போட்டிருக்கிறார். ஊரில் கலவரம் ஏற்பட தாங்கள் தான் என்பதை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அருள்நிதி முழிக்கும் இடங்களில் அப்ளாஸ்! சற்றே ஆன்ட்டி லுக்கில் அழகாக, அம்சமாக, அசத்தலாக தெரியும் ரம்யா நம்பீசன், அருள்நிதியின் காதலியாக, உள்ளூர் பாலர் பள்ளிக்கூட டீச்சராக பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். அம்மணியின் கூடவே வரும் சக டீச்சர் தோழியும் அசத்தல்!
சிங்கம் புலி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பகவதி பெருமாள், ராஜ்குமார் உள்ளிட்ட அருள்நிதியின் தோழர்களும், சக காவலர்களுமான நடிகர்களும் தங்களது நச்-டச் நடிப்பில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றனர். இவர்களை மாதிரியே அக்கிராமத்தில் ஆக்ஷ்ன் கவுன்சிலராக வரும் களவாணி திருமுருகன் மற்றும் ஆர்த்தி உள்ளிட்டவர்களின் பாத்திரமும், அவர்களது நடிப்பும் கச்சிதம். பி.ஆர்.ராஜ்ஜின் பின்னணி இசையும், அந்தக்காலத்து பாடலாக ஆரம்பாகி, இந்தக்காலத்து பாடலாக முடியும் பாடல் காட்சியும் படத்திற்கு பெரும் பலம். மகேஷ் முத்துசாமியின் ஔிப்பதிவும், ஷாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் அப்படியே! என்.ஜெ.ஸ்ரீகிருஷ்ணாவின் எழுத்து-இயக்கத்தில், நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்தின் இடைவேளைக்கு முந்தைய பகுதி மாதிரி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பின்பாதியும் இல்லாதது குறை. ஆனாலும் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் திரைப்படம் கலர்புல், காமெடி, கமர்ஷியல் படமாகும்!