கடைசி கட்ட பரபரப்பில் பாகுபலி !
4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பது சாதாரண விஷயமல்ல. பாகுபலி படத்தின் கடைசி கட்ட வேலைகள் இரவு பகலாக நடந்து கொண்டு வருவதாக ஐதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஒளிப்பதிவாளரான செந்தில்குமார் படத்தின் ஒளித்தரம் சரியாக இருக்கிறதா என ஐதராபாத்தில் சரி பார்த்துக் கொண்டிருக்க, படத்தின் இயக்குனரான ராஜமௌலி, மும்பையில் தங்கியிருந்து ஹிந்தியில் படத்தை வெளியிடும் கரண் ஜோஹருடன் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 4000 பிரதிகள் என்றால் அதற்கான ஹார்ட் டிஸ்க்குகளைக் காப்பி செய்யும் பணி ஒரு பக்கம், சில இடங்களில் பிரின்ட்டுகள் என வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம். இறுதிக்கட்டப் பணிகளில் வேலை பார்க்கும் பலரும் வீடுகளுக்குக் கூடச் செல்லாமல் இரவு பகலாக ஓய்வின்றி உழைத்து வருகிறார்களாம். சாதாரணமாக 1000 பிரதிகள் என்றாலே அந்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது கடினம். அப்படியிருக்க 4000 பிரதிகள் என்றால் எவ்வளவு நேரம் வேலை போகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஹாலிவுட் படங்களின் வெளியீடு அளவிற்கு இந்த பாகுபலி படத்தை பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள். ஜுலை 10ம் தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர் மன்ற காட்சிகளுக்கான டிக்கட்டுகளின் விலை 5000 ரூபாய் அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தித் திரையுலகத்தின் பல முக்கியஸ்தர்களை அழைத்து படத்தைக் காட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். எப்படியும் பாகுபலி பிரமிக்க வைத்துவிடும் என்று படக்குழுவினர் மிகப் பெரும் நம்பிக்கையில் இருக்கிறார்களாம்.