செயற்கை ரத்தம்
செயற்கை ரத்தம்
மனிதனுக்குள் ஓடும் உயிர்நதியான ரத்தத்தின் தேவை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செயற்கை ரத்தத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் இங்கிலாந்து மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உலகளவில் ஆண்டுதோறும் 1.2 கோடி பேருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ரத்தவங்கிகளில் உள்ள ரத்தத்தின் இருப்பு, 80 லட்சம் பேருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
இந்த பற்றாக்குறையைப் போக்க இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்பு, 'சிந்தெட்டிக் பிளட்' எனப்படும் செயற்கை ரத்தத்தைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மனிதன் உயிர் வாழ ரத்தம் மிக அவசியமானது என்ற உண்மையை நீண்ட காலத்திற்கு முன்பே மருத்துவ உலகம் அறிந்துவிட்டது. அதோடு ரத்தத்தை செயற்கையாகத் தயாரிக்கும் ஆய்வுகளும் வெகு காலத்துக்கு முன்பே தொடங்கி விட்டன.
பல ஆண்டுகால முயற்சிக்குப் பின்னர், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய மருத்துவர்கள் முதன்முதலாக 'செயற்கையான ரத்தத்தை' த் தயாரித்து பரிசோதித்தனர்.
ஆனால், உடலில் ஏற்றப்பட்ட இந்த செயற்கை ரத்தம் சுமார் 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் இயற்கையாகவே செயல்படும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதால், நவீன முறையில் செயற்கை ரத்தத்தை தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில்,இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அமைப்பு, செயற்கை ரத்ததைத் தயாரிக்கும் பணியை பல வருடங்களுக்கு முன் தொடங்கி இருந்தாலும், அதை மனித உடலில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கும் பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் என தற்போது கூறியுள்ளனர்.
மனிதனின் உயிர் ஆதாரமான ஸ்டெம் செல் எனப்படும் பரம்பரை உயிர் அணுக்களை, குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்திலிருந்து சேகரிக்க முடியும்.
இந்த ஸ்டெம் செல்களை பயன்படுத்தி புதிதாக ரத்த செல்களையும், சேகரிக்கப்பட்ட ரத்தத்தையும் மனித உடம்பில் செலுத்தி அது எதிர்மறை விளைவுகள் இல்லாமல் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படும் என கூறுகின்றனர்.
அப்போது இது நிச்சயம் ஒரு மருத்துவ புரட்சியாக இருக்கும் .