உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி : சுஷில் குமார் காயம் !
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய வீரர் சுஷில் குமார் காயம் காரணமாக விலகினார். இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர் சுஷில் குமார், 32. உலக (2010) சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றவர். 2008 (வெண்கலம்), 2012 (வெள்ளி) ஒலிம்பிக் மற்றும் 2014 காமன்வெல்த்தில் (தங்கம்) பதக்கம் வென்றவர். தற்போது ‘பிரிஸ்டைல்’ 74 கி.கி., பிரிவில் விளையாடி வருகிறார்.
தற்போது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் சுஷில் குமார், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான (செப்., 7, லாஸ்வேகாஸ்) தேர்வு முகாமில் (வரும் 6,7ம் தேதி) பங்கேற்கவில்லை.
இதனால் இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாது. ரியோ டி ஜெனிரோ (2016) ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றாக கருதப்படும் இதில் இருந்து விலகியது குறித்து சுஷில் குமார் கூறியது: எனது வலது தோள்பட்டை காயம் சரியாக ஓய்வெடுக்கும் படி டாக்டர்கள் கூறினர். இது சரியாக எத்தனை நாளாகும் என உறுதியாக தெரியவில்லை. இதனால் தேர்வு முகாமில் பங்கேற்க இயலாது.
ஒலிம்பிக்கில் தகுதி பெற இந்த வாய்ப்பு இல்லை என்றாலும், அடுத்த ஆண்டில் வேறு சில வாய்ப்புகள் உள்ளன. இதில் சாதிக்க கடின பயிற்சியில் ஈடுபடுவேன்.