கோபா அமெரிக்க கால்பந்து: பைனலில் அர்ஜென்டினா
கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் பைனலுக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. அரையிறுதியில் பராகுவே அணியை தோற்கடித்தது. தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. கான்செப்சியன் நகரில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் அர்ஜென்டினா, பராகுவே அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு 15வது நிமிடத்தில் மார்கஸ் ரோஜோ முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் சேவியர் பாஸ்டோர் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய பராகுவே அணிக்கு 43வது நிமிடத்தில் லுாகாஸ் பாரியாஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா அணி 2–1 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அர்ஜென்டினா அணியின் டி மரியா 47, 53வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றுத்தந்தார். அசத்தலாக ஆடிய அர்ஜென்டினாவுக்கு செர்ஜியோ அகுயுரோ (80வது நிமிடம்), கான்சலோ ஹிகுயன் (83வது) தலா ஒரு கோல் அடித்து கைகொாடுத்தனர். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
வரும் ஜூலை 4ல் நடக்கவுள்ள பைனலில், அர்ஜென்டினா, சிலி அணிகள் மோதுகின்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில், அரையிறுதியில் தோல்வி அடைந்த பெரு, பராகுவே அணிகள் ஜூலை 3ல் விளையாடுகின்றன.