விஜயகாந்தைப் பாராட்டும் சமூக வலைதளங்கள் !
நாட்டில் எது நடந்தாலும், அல்லது விஜயகாந்த் எங்கு பேசினாலும், எது செய்தாலும் அவரைக் கிண்டலடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் யோகா தினம் அன்று செய்த பயிற்சியைக் கூட விஷம குணம் கொண்ட சிலர் கிண்டலடித்து மீமீக்களையும், கமெண்ட்டுகளையும் போட்டனர். ஆனால், அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய விஷயத்தில் வலைத்தளவாதிகள் உட்பட பலரும் விஜயகாந்தைப் பாராட்டி வருகிறார்கள். ஒரு சீனியர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்து கொண்டு அப்துல் கலாமுக்கு அவர் மதுரையில் அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் நேற்று ராமேசுவரத்திலும் உடல் அடக்கம் நடந்த போது நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியது அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. இத்தனை நாட்களாக விஜயகாந்தை வைத்து மீமீக்களை உருவாக்கி கிண்டலடித்தும், ட்ரோல் செய்து வந்தவர்களும் கூட அவரை நேற்று பாராட்டும் விதத்தில் மீமீக்களைப் போட்டனர். அது மட்டுமல்ல நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த கலாமின் உடல் அடக்க நிகழ்வின் போது கூட அரசியல் மாச்சரியங்களைக் கடந்து அன்புமணிக்கு அருகில் அவர் உட்கார்ந்திருந்ததும் ஒரு நெகிழ்ச்சியான பார்வையாகவே பார்க்கப்படுகிறது. அதோடு, விஜயகாந்த் நேற்று பிரதமரிடம் நேரிடையாகவும், கடிதம் மூலமும் அப்துல் கலாம் பிறந்த தினத்தை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு விஜயகாந்த் இந்த விஷயத்தில் செயல்பட்டுள்ளார் என்று அரசியல், சினிமா சாராத சிலரும் அவரைப் பாராட்டுகிறார்கள். மேலே உள்ள படம் சமூக வலைதளங்களில் விஜயகாந்தை பாராட்டி வௌியிடப்பட்ட படம் அது. இதுபோன்று ஏகப்பட்ட பாராட்டுகள் அவருக்கு குவிந்தன.