ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த பிறகும் அசராத இளையராஜா!
பாலாவின் தாரை தப்பட்டை படம் இளையராஜாவுக்கு ஆயிரமாவது படமாகும். ஆனால் இவ்வளவு படங்களுக்கு இசையமைத்து விட்டபோதும் இசை மீது அவருக்கு இருக்கும் ஈடுபாடும், ஆர்வமும் இன்னமும் குறையவில்லை. அதே பழைய வேகத்துடன் இப்போதும் படங்களுக்கு இசையமைக்கிறார் இளையராஜா. குறிப்பாக, இந்த 2015ம் ஆண்டு மட்டும் 20 படங்களுக்கு இசையமைக்கிறார் இளையராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிப்படங்கள் இதில் அடங்கும். இதில், ராணி ருத்ரமா தேவி, தாரைத்தப்பட்டை, மேற்கு தொடர்ச்சிமலை, குற்றமும் தண்டனையும், லவ் அண்ட் லவ் ஒன்லி ஆகியவை மெகா பட்ஜெட் படங்களாகும். அதனால், லண்டன், மும்பை, ஐதராபாத் என்று இசைப்பணிக்காக பறந்து கொண்டேயிருக்கிறார் இளையராஜா. அப்படி செல்பவர், படங்களின் பின்னணி இசைக்காக அதிக நாட்களை எடுத்துக்கொள்வதில்லையாம். ஒருமுறை படத்தைப் போட்டுப்பார்ப்பவர், ஒரே நாளில் அதற்கான நோட்ஸை கொடுத்து விட்டு வந்து விடுகிறாராம். இளையராஜாவின் இந்த வேகத்தைப்பார்த்து அங்குள்ள இசைக்கலைஞர்கள் ஆச்சர்யப்படுகிறார்களாம்.