குணத்தை பிரதிபலிக்கும் தூக்கம் நீங்கள் எந்த ரகம்?
மனிதனின் தூங்கும் தன்மையை வைத்துகூட அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உடல் நலம் குறித்து இணையதளத்தில், பல்வேறு கட்டுரைகளை எழுதுபவர் மரைனா ரோஸ். இவர் சமீபத்தில் மனிதன் தூங்கும் முறைகள் குறித்து பிளாக்கில் (வலை பின்னல்) கட்டுரை எழுதியிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மனிதன் தூங்கும் தன்மையை (பொசிஷன்) வைத்து அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்கலாம். லண்டனில் உள்ள தூக்க மதிப்பீடு மற்றும் ஆலோசனை சேவை அமைப்பின் உறுப்பினர் கிறிஸ் இட்சிகோவஸ்கி, சிலரது தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவர்கள் தூங்கும் தன்மையின் அடிப்படையில் குணாதிசயங்களை கணித்துள்ளார். தாயின் கருப்பையில் குழந்தை இருப்பது போன்று கை, கால்களை சுருக்கியபடி (தி பேடஸ்) தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் சாந்தமாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பர். இடதுபுறமோ, வலதுபுறமோ கையை கீழே இறக்கி (லாக்) ஒருபக்கமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாய் பழகும் தன்மை கொண்டவர்கள். ஆனால் இப்படி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள். இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகே வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரை எதற்கெடுத்தாலும் குறை கூறுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு தொழில் சிந்தனை அதிகம் இருக்கும்.
சிலர் கை, கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து (தி சோல்ஜர்) தூங்குவார்கள். இதுபோன்று உறங்குபவர்கள் நாவடக்கம் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கை, கால்களை தாறுமாறாக நீட்டித் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் (தி ஸ்டார்பிஷ்) பெருந்தன்மை கொண்டவர்களாகவும், பணிவான தன்மை பெற்றவர்களாவும் இருப்பர். இதேபோல் தூக்கத்தில் இருந்து எழும் தன்மையை வைத்தும், ஒவ்வொருவரின் குணாதிசயங்களை கணிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.