"ஆரஞ்சு மிட்டாய் - விமர்சனம்"
நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக தயாரித்திருப்பதோடு, கதையின் நாயகனராக நடித்து வௌிவந்திருக்கும் படம் தான் ஆரஞ்சுமிட்டாய். கைலாசம் எனும் வயதான இதய நோயாளி விஜய்சேதுபதி.
திடீரென ஒருநாள் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட 108 ஆம்புலன்ஸை வர வைக்கிறார். அவ்வாறு வரும் அவசர சிகிச்சை ஊர்தியில், அவசரநிலை மருத்துவ உதவியாளராக வரும் சத்யா எனும் ரமேஷ் திலக்கிற்கு காதலில் பிரச்னை. அந்த பிரச்னையினூடே இதயநோயாளி கைலாசம் - விஜய் சேதுபதியை தூக்கி செல்ல வருகிறார் ரமேஷ் திலக். உடன் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுமுகமாக ஆறுபாலாவும் வருகிறார். வயதானாலும் கட்டுடலனுடன் கம்பீரமாக இருக்கும் விஜய்சேதுபதியை பார்த்ததும் ஷாக். ஒரு நோயாளி மாதிரி இல்லாமல், ஆம்புலன்ஸ் டிரைவருடனும், அவசரநிலை மருத்துவருடனும் லொள்ளு - லோலாயி செய்தபடி வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில், ஆம்புலன்ஸின் டயர் பஞ்சராகிறது. ஒருபக்கம் ரமேஷ் திலக்கின் காதலியின் செல்போன் இம்சை வேறு, மற்றொருபக்கம் இதயநோயாளியை விரைந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யாததற்கு மேலதிகாரியின் குடைச்சல் வேறு... இதில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சத்யாவிற்கு உதவமுன் வரும் விஜய்சேதுபதி, திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு சரிகிறார். கைலாசம் - விஜய்சேதுபதி விரைந்து மருந்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பிழைத்தாரா..?, சத்யா - ரமேஷ் திலக்கின் காதல் கல்யாணத்தில் முடிந்ததா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்க முயன்று, வித்தியாசத்தில் புளிப்பு மிட்டாயாக, இனிப்பு மிட்டாயாக ஜெயித்திருக்கும் ஆரஞ்சுமிட்டாய், விறுவிறுப்பில் கசப்பு மிட்டாயாக கடுப்பேற்றுகிறது.
விஜய் சேதுபதி, கைலாசம் எனும் வயது முதிர்ந்த இருதய நோயாளியாக ரொம்பவே மெனக்கட்டு நடித்திருக்கிறார். மேக்-அப்பில் தெரியும் வயது முதிர்வு, நடை, உடை, பாவனைகளில் சற்றே காணாமல் போய் இருப்பது பலவீனம். சத்யாவாக ரமேஷ் திலக், காதலுடனும், காதலியுடனும், காதலியின் அப்பாவுடனும் கல்யாணத்திற்காக போராடுவதிலும், வயதான இருதய நோயாளியை காப்பாற்ற போராடுவதிலும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவர் ஆறுமுகமாக வரும் ஆறுபாலா, காமெடி, டிராஜிடிகளிலும் கவனம் ஈர்க்கின்றார். சத்யாவின் காதலி காவ்யாவாக வரும் அஷ்ரிதாவும் நடிப்பிலும் மிளிர்ந்திருக்கிறார். வினோத் சாகர், சிரிப்பு மணிவண்ன், விஷாலினி, தமிழ்ச்செல்வி உள்ளிட்டவர்களும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.
ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சில இடங்களில் வருடலாகவும், சில இடங்களில் நெருடலாகவும் இருப்பது ஆரஞ்சுமிட்டாயின் மற்றுமொரு பலவீனம். விஜய் சேதுபதி - பிஜூ விஸ்வநாத் இவர்களது எழுத்தில் ஆரஞ்சுமிட்டாய் ஆரோக்கியமான புளிப்புமிட்டாயாக இருந்தாலும், பிஜூ விஸ்வநாத்தின் ஔிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்டவைகளில் ஆரஞ்சுமிட்டாய் சற்றே கசப்பு மருந்தாக கசக்கிறது.