பாகிஸ்தான் சாதனை வெற்றி !
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் வென்றது. இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் பல்லேகெலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 278, பாகிஸ்தான் 215 ரன்கள் எடுத்தன. இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்தது. 377 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. மசூது (114), யூனிஸ் கான் (101) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மசூது 125 ரன்களில் வெளியேறினார். பின் இணைந்த கேப்டன் மிஸ்பா, யூனிஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிஸ்பா அரை சதம் கடந்தார். பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யூனிஸ் கான் (171), மிஸ்பா (59) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி அதிக ரன்களை ‘சேஸ்’ செய்து சாதனை வெற்றி பெற்றது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான (கராச்சி, 1994) டெஸ்டில் 314 ரன்களை ‘சேஸ்’ செய்து வென்றிருந்தது.
ஒட்டுமொத்த டெஸ்ட் அரங்கி்ல அதிக ரன்களை ‘சேஸ்’ செய்து வென்ற போட்டிகளின் பட்டியலில் இது 6வது இடத்தை பிடித்தது. ஆசிய அளவில் இரண்டாவது இடத்தை பெற்றது.