ஹீரோவான மொட்டை ராஜேந்திரன் !
தமிழ்சினிமாவில் இப்போது காமெடியன்களுக்குத்தான் கடும் பஞ்சம். வாய்க்கொழுப்பு காரணமாக வடிவேலுவை வீட்டில் உட்கார வைத்துவிட்டனர். கஞ்சாகருப்பு, கருணாஸ் போன்றவர்களை மக்கள் ரசிக்கத் தயாராக இல்லை. சந்தானமோ ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று பாதை மாறிவிட்டார். எனவே காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் இருவரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களாகிவிட்டனர்! இவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனி பாணியை வகுத்துக்கொண்டு காமெடியில் தனித்தனியாக கலக்கி வருகிறார்கள்! இன்றைய தேதியில் பிஸியான காமெடி நடிகர்கள் யாரென்றால் இவர்கள்தான். தற்போது இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். காமெடிப்படமான இப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி என்று சோகமான பெயர் வைத்துள்ளனர். குகன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் பார்வதி நாயர் ஒரு கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஃபேன்டஸி காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குமாம் !