‘‘இந்திய அணியில் ‘சீனியர்’, ‘ஜூனியர்’ என்று பாகுபாடு,கேப்டன் ரகானே !
இந்திய அணியில் ‘சீனியர்’, ‘ஜூனியர்’ என்ற பாகுபாடு கிடையாது. அனைத்து வீரர்களுக்கும் சமமான அந்தஸ்து தரப்படுகிறது,’’ என, கேப்டன் ரகானே தெரிவித்தார்.வங்கதேசத்துக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ரகானே சேர்க்கப்படவில்லை. இவர், இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களில் பந்துகளை வீணடிப்பதாக தோனி விமர்சித்தார். பின் ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கேப்டனாக ரகானே திடீரென நியமிக்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியம் தந்தது.
இந்தச் சூழலில் ஜிம்பாப்வே கிளம்பும் முன் ரகானே அளித்த பேட்டி:
என்னைப் பற்றி கேப்டன் தோனி தெரிவித்த கருத்துக்களை நல்ல விதமாக எடுத்துக் கொண்டு சரி செய்து கொள்வேன். இப்போது அதை மறந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரையில் வங்கதேச தொடர் முடிந்து போன ஒன்று.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்த வேண்டும். இது மட்டும் தான் எனது மனதில் உள்ளது. அணியில் ‘சீனியர்’, ‘ஜூனியர்’ என்ற பாகுபாடுகள் கிடையாது. 15 வீரர்களுக்கும் சமமான அந்தஸ்து தான் தரப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் எனது ஆதரவு உண்டு.
மற்றபடி கேப்டன் என்ற முறையில் எனது சொந்த ‘ஐடியா’வை பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு முயற்சிப்பேன். இந்திய அணியில் இப்போதுள்ள வீரர்களில் ஹர்பஜனுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. போட்டியின் போது எனக்கு ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் இவரை அணுகுவேன். ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ரகானே கூறினார்.