பிரண்டன் மெக்கலம் புதிய சாதனை !
இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டியில் விளாசிய நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் 64 பந்தில் 158 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்தில், உள்ளூர் கவுன்டி அணிகள் பங்கேற்கும் ‘நாட்வெஸ்ட் டுவென்டி–20 பிளாஸ்ட்’ தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் வார்விக்சயர், டெர்பிஷயர் அணிகள் மோதின.
முதலில் ‘பேட்டிங்’ செய்த வார்விக்சயர் அணிக்கு கேப்டன் வருண் சோப்ரா (51) நல்ல துவக்கம் தந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய மற்றொரு துவக்க வீரர் பிரண்டன் மெக்கலம், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். டெர்பிஷயர் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய இவர் 42 பந்தில் சதத்தை எட்டினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த இவர் 64 பந்தில் 158 ரன்கள் (11 சிக்சர், 13 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். வார்விக்சயர் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 242 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய டெர்பிஷயர் அணி 19.4 ஓவரில் 182 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேப்டன் டர்ஸ்டன் (43), ரூதர்போர்டு (39) ஆறுதல் தந்தனர்.
இதன்மூலம் ‘நாட்வெஸ்ட்’ தொடரில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார் மெக்கலம். இதற்கு முன், கடந்த ஆண்டு செம்ஸ்போர்டில் நடந்த எசக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சசக்ஸ் அணியின் லுாக் ரைட் 66 பந்தில் 153 ரன்கள் எடுத்தார். ‘டுவென்டி–20’ அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தனது சொந்த சாதனையை சமன் செய்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டார் மெக்கலம். கடந்த 2008ல் பெங்களூருவில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் கோல்கட்டா சார்பில் விளையாடிய இவர், 73 பந்தில் 158 ரன்கள் (13 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். முதலிடத்தில் பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் (175* ரன், எதிர்–புனே, 2013, இடம்–பெங்களூரு) உள்ளார்.