நீராவி -பாக்டீரியா மூலம் இயங்கும் இயந்திரம்!
மெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தின் உயிரி பொறியியல் விஞ்ஞானிகள், நீராவியில் மட்டுமே இயங்கும் ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். வெறும், 320 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட, 'நீராவி ஆலை - வேப்பர் மில்' என்ற அந்தக் கருவி இயங்க, பாக்டீரியாக்களும், நீராவியும் மட்டுமே போதுமானது. இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஓஸ்குர் சாஹின் மற்றும் அவரது குழுவினர், பாக்டீரியாவின் வித்துக்களை பயன்படுத்தக் காரணம் உண்டு. சில வகை பாக்டீரிய வித்துக்கள், ஈரப்பதம் பட்டதும் விரிவடையும்; உலர்ந்து போனால் சுருங்கிவிடும். பாக்டீரிய வித்துக்களின் இந்த அடிப்படை குணம், உயிரியல் உலகம் ஏற்கனவே அறிந்தது தான். ஆனால், இந்த சுருங்கி விரியும் தன்மையை, இயக்கும் சக்தியாக மாற்ற முடியும் என்று கண்டறிந்தது தான், சாஹின் அண்ட் கோ வின் சாமர்த்தியம்.
நுண்ணிய பல லட்சம் பாக்டீரிய வித்துக்களை பசை போல குழைத்து, அதை பிளாஸ்டிக் பட்டைகளின் மேல், விஞ்ஞானிகள் பூசினர். அந்த பட்டை மீது நீராவியை படச் செய்ததும், அதிலிருந்த லட்சக்கணக்கான பாக்டீரிய வித்துக்கள் உப்பி விட, வினாடிக்கும் குறைவான நேரத்திற்குள், அந்த பட்டை விரிவடைந்தது. நீராவியை நிறுத்திய மறுகணமே, அந்த பட்டை சுருங்கியது. சுருங்கி விரியும் பாக்டீரிய பட்டையை வைத்து ஒரு சிறிய இயந்திரத்தை இயக்கி, அதன் மூலம் மின்சாரத்தை தயாரித்து, எல்.இ.டி., விளக்கை எரிய வைக்க, சாஹினின் அணியால் முடிந்தது. அதுமட்டுமல்ல; அவர்களால், 0.1 கி.கி., எடையுள்ள பொம்மை கார் ஒன்றை நகர வைக்க முடிந்தது. அறை வெப்பநிலையில், எந்த நீரும் தொடர்ந்து ஆவியாகியபடியே தான் உள்ளது. அந்த இயற்கையான நிகழ்வை, சாஹின் குழுவினர் தங்கள் கண்டுபிடிப்புக்கு சாதகமாக்கிக் கொண்டனர். என்றாலும், சாதாரண நீர் ஆவியாகும்போது பாக்டீரிய பட்டை விரிவதை விட, சற்று வெப்பமான நீரிலிருந்து கிளம்பும் நீராவியால் அவர்களது நீராவி ஆலை, வேகமாக சுழன்றது.
இப்போதைக்கு இந்த கண்டுபிடிப்பால், மிகச் சிறிய சாதனத்தை இயக்க முடிந்திருக்கிறது; மிகச் சிறிய அளவில் மின் உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் இவை, இந்த கண்டுபிடிப்பின் ஆரம்பகட்ட பலன்கள் மட்டுமே என்றும், இன்னும் பல பயன்கள் இதனால் விளையும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சதுர அடி கணக்கில் பார்த்தால், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவற்றை விட, பாக்டீரிய பட்டை சாதனத்தால் மலிவான செலவில் சக்தியை உண்டாக்க முடியும் என்கிறது, கொலம்பியா பல்கலைக் கழக ஆய்வுக் குழு. இந்த கண்டுபிடிப்பு மேம்படுத்தப்பட்டால், அவ்வப்போது எண்ணெயையும், பேட்டரியையும் மாற்றுவதுபோல, பாக்டீரிய பட்டைகளையும் தண்ணீரையும் மட்டும் மாற்றினால், சாலையில் சத்தமில்லாமல் ஓடும் நீராவி கார்கள், அடுத்த, 10 ஆண்டுகளில் வந்துவிடக் கூடும்.