சிம்புவிடம் பேசிய தனுஷ்...!
சிம்பு, ஹன்சிகா நடித்து நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து வாலு திரைப்படத்தை டி.ராஜேந்தர் வாங்கிய பிறகுதான் அந்தப் படத்திற்கு ஒரு உயிர் வந்தது. ஜுலை 17ம் தேதி படத்தை வெளியிடுவதாக கடந்த ஒரு மாத காலமாகவே டிஆர் விளம்பரம் செய்து வந்தார். ஆனால், அதற்குள் படத்தின் வெளியீட்டை எதிர்த்து ஒரு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு தடை விதித்து விட்டார்கள். இந்தப் படத்தை எதிர்த்து மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். அவையும் நாளை அல்லது மறுநாள் விசாரணைக்கு வரும் என்கிறார்கள். இதனால் இந்த வாரம் வாலு வெளிவருவது சந்தேகம்தான் என்கிறார்கள். இதனிடையே, இந்தப் படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று டிஆர் கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து குற்றம் சாட்டினார்.
வாலுவுக்குப் போட்டியாக வரும் ஒரே படம் மாரி மட்டுமே. எனவே, மாரி படத்தின் நாயகன் தனுஷ், படத்தின் தயாரிப்பாளர்கள் மீதும் சந்தேகம் திரும்பியது. ஆனால், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை, வாலு படத்தைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் பைனான்ஸ் பிரச்சனையால் மட்டுமே இப்படிப் படத்திற்கு தடை வந்துள்ளது என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள். வாலு படத்தின் தடை குறித்து கேள்விப்பட்ட தனுஷ் சிம்புவிடம் தொலைபேசியில் பேசியதாகவும், சிம்பு இந்தத் தடை குறித்து பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டிருப்பதாகவும், நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார். போட்டியில் வாலு இல்லை என்பதால், இப்போது ஜுலை 17ம் தேதி தனுஷ் நடித்துள்ள மாரி படம் மட்டுமே வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.