பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிமியர் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்க 2 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது.கடந்த 2013ல் நடந்த ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அன்கித் சவான், சண்டிலா சிக்கினர். ஸ்ரீசாந்த், அன்கித் சவானுக்கு போட்டியில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ., பதவியிலிருந்து சீனிவாசன் ஒதுங்க நேரிட்டது. சூதாட்ட புகாரை விசாரிக்க, நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான விசாரணை குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழுவின் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ஐ.பி.எல்., செயல் அதிகாரி சுந்தர் ராமன், ராஜஸ்தான் அணியின் சக உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. தவிர, இரு அணிகள் மற்றும் இவர்களின் தண்டனை விவரம் குறித்து முடிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நீதிபதிகள் (அசோக் பான், ரவீந்திரன்) அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் விவரத்தை வெளியிட்டது.