"பாபநாசம் - விமர்சனம்"
ஊரில், உழைப்பால் உயர்ந்து நல்ல பெயரும், புகழும் உடைய குடும்பமாக திகழ்கிறது. வயதிற்கு வந்த மூத்த மகள் செல்வி எனும் நிவேதா தாமஸ், குட்டி மகள் மீனா எனும் எஸ்தர் அனில் இருவரும் கமலின் செல்லமோ செல்லம்! அப்படிப்பட்ட மூத்த மகள் செல்வியை, ஸ்கூல் டூர் செல்லும்போது எதிர்பாரத விதமாக, அவர் குளிக்கும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு வௌியூர் மாணவன் ஒருவன், தன் இச்சைக்கு இணங்குமாறு வீடு தேடி வந்து மிரட்டுகிறான். இது தாய் கௌதமிக்கு தெரியவருகிறது. அம்மாவும், பொண்ணும் அவனுக்கு பேசி புரிய வைத்து செல்போன் பதிவை அழிக்க வைக்கலாம்... என அந்த மாணவனிடம் பேசுகின்றனர். உன் மகள் நிர்வாணத்தை என் செல்போனிலிருந்து அழிக்க வேண்டுமென்றால் அவள் என்னுடன் படுக்க வேண்டும்... அல்லது நீ படுக்க வேண்டும்... என கௌதமியை மிரட்டுகிறான் அந்த மாணவன். இதைக்கேட்டு வெகுண்டெழும் சுயம்புலிங்கம் கமலின் மூத்த பெண் வாரிசு, அவன் கையில் இருக்கும் செல்போனை அடித்து நொறுக்க, அருகில் கிடக்கும் தடியை எடுக்கிறார். அது அந்த மாணவனின் உயிரையே பறிக்கிறது. இராவோடு இராவாக அம்மாவும், பொண்ணும் சேர்ந்து அரக்க பறக்க அவனை தங்கள் வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு விடியற்காலை வீடு திரும்பும் கமலிடம் நடந்ததை சொல்லி பதறுகின்றனர். இறந்து போனவன் திருநெல்வேலி மாவட்டத்தின் பெண் ஐ.ஜி.யின் ஒரே மகன் என்பது தெரிந்ததும், கமல் மாஸ்டர் பிளானில் இறங்குகிறார். போலீஸிடமிருந்து மனைவியையும்,
வயதுக்கு வந்த மகளையும், கூடவே, குடும்ப கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டி கமல் செய்யும் செட்-அப்புகளும், போடும் நாடகங்களும் தான் பாபநாசம் படத்தின் மொத்த கதையும்! கமலும், அவரது குடும்பமும், போலீஸுக்கு போக்கு காட்டி தப்பித்ததா.? அல்லது சிக்கி சின்னாபின்னமானதா.? என்பதை இதுவரை தமிழ் படங்களில் பார்த்திராத வித்தியாசம், விறுவிறுப்புடன் பாபநாசம் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். சுயம்புலிங்கமாக கமல்ஹாசன், வழக்கம் போலவே தான் ஏற்று நடிக்கும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முன்பாதி படத்தில் ஆரம்பகாட்சி தொட்டு இடைவேளை வரை கமல், தனது கேபிள் டிவி.,யில் அர்த்தராத்திரியில் போடும் அந்தமாதிரி படங்களை பார்த்துவிட்டு வந்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான கௌதமியிடம் இளமை ததும்ப செய்யும் சில்மிஷங்களில் ஆகட்டும், அதே கேபிள் நெட்வொர்க்கில் பகலில் போடும் நல்ல சினிமாக்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு, சினிமாவையே கல்வியாக்கி கொண்டு நான்காம் வகுப்பு வரையே படித்த கமல், போலீஸ்க்கு போக்கு காட்டுவதிலாகட்டும்... என ஒவ்வொரு காட்சியிலும் தன் பாணியில் தனி முத்திரை பதித்து தன் இந்தப்படத்தில் முத்த காட்சி இல்லாத குறையை போக்கியிருக்கிறார்.
ஐந்து பைசாவை கூட அளந்து அளந்து செலவு செய்யும் கமல், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாதது, மாமனாரின் சொத்துக்கு ஆசைப்படாதது, சிகரெட் அட்டையில் செலவு கணக்கு எழுதுவது, டீக்கடையில் லஞ்சலாவண்ய போலீஸ்களை கேலி கிண்டல் செய்வது, கொலை பழியில் சிக்க இருக்கும் குடும்பத்தை காப்பாற்றிட வேண்டி இறுதி வரை போராடுவது, இறுதியில் பெத்த மனம் பித்து என்பதற்கு ஏற்ப... தன் பிள்ளையால் தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்த பெண் ஐஜியிடமும், அவரது கணவரிடமும், உலகத்தில் எங்கிருந்தெல்லாமோ மனிதர்கள் வந்து பாவங்களை கழுவும் பாபநாசத்தில், நான் கொஞ்சம் கொஞ்சமாக என் பாவங்களை கழுவி கொள்கிறேன் என கண்ணீர் விடுவது.... உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியிலும் கமல், போலீஸின் கைகளை மட்டுமல்லாது ரசிகர்களையும் சீட்டோடு கட்டிப்போடுகிறார். ராணியாக கமலின் காதல் மனைவியாக கௌதமி, நீண்ட இடைவௌிக்கு பின் கமலின் மனைவியாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்பதே பொருந்தும். போலீஸ் விசாரணையில் ஒவ்வொரு முறையும் உளறி கொட்டி விடுவாரோ.? என பயம் கொள்ளும் ரசிகனை, பக்காவாக அதேமனநிலையில் வைத்துக்கொண்டு இருந்து நடிப்பில் வென்றிருக்கிறார்.
கமலின் மூத்த மகள் செல்வியாக வரும் நிவேதா தாமஸ், இளைய மகள் எஸ்தர் அனில் இருவரும் கமல்-கௌதமி மாதிரியே பாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கின்றனர். பொல்லாத போலீஸ் கலாபவன் மணி, நல்ல போலீஸ் இளவரசு, டீக்கடை பாய் எம்.எஸ்.பாஸ்கர், சப்-இன்ஸ் - அருள்தாஸ், பெண் போலீஸ் ஐஜி கீதா பிரபாகர் எனும் ஆஷா சரத், அவரது கணவர் பிரபாகராக ஆனந்த் மகாதேவன், மாமனார் - டெல்லி கணேஷ், மாமியார் - சாந்தி வில்லியம்ஸ், ஸ்ரீராம், அபிஷேக், சார்லி, வையாபுரி, நெல்லை சிவா, ரோஷன், காவிபெரிய தம்பி, மதனகோபால் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள், ரெம்பான்பால்ராஜின் கலை இயக்கம், அயூப்கானின் படத்தொகுப்பு, எழுத்தாளர் ஜெயமோகனின் வசன வரிகள், சுதீப் வாசுதேவ்வின் ஔிப்பதிவு, ஜிப்ரானின் இசை உள்ளிட்ட ஒவ்வொன்றும் ஜீத்து ஜோசப்பின் எழுத்து-இயக்கத்திற்கு பக்காவாக பலம் சேர்த்திருக்கின்றனர். நான்காம் வகுப்பு படித்துவிட்டு, ஐ.ஜி. மகனின் கொலையில் போலீஸ்க்கே போக்கு காட்டும் கமலும், அவரது குடும்பமும் ஆகஸ்ட் 2ம் தேதி, தென்காசியில் நடந்த சுவாமிஜியின் சொற்பொழிவில் கலந்து கொண்டதா...? இல்லையா..? என்பதை இந்தகாலத்தில் நிச்சயம் அங்கு எப்படியும் பதிவு செய்யப்பட்டிருக்கும் வீடியோ பதிவில் கேட்டு வாங்கி போட்டு பார்த்திருந்தாலே, கமல் போலீஸ்க்கு போக்கு காட்டுவது புலப்பட்டிருக்குமே எனும் கேள்வி.?! ரசிகர்களுக்கு எழாத வகையில் படத்தின் கதையையும், திரைக்கதையையும், காட்சியமைப்புகளையும் பக்காவாக நகர்த்தியிருப்பதாலேயே கமலின் பாபநாசம் ஜெயித்திருக்கிறது.