தோனி- கோஹ்லி மோதலா * சாஸ்திரி விளக்கம் !
கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் இந்திய கேப்டன் தோனி, டெஸ்டிலிருந்து விடை பெற்றார். இதன் பின் இந்தப்பதவியை கோஹ்லி ஏற்றார். சமீபத்திய வங்கதேச தொடரில் 1–2 என இந்திய அணி இழந்தது. இதன் இரண்டாவது போட்டி முடிந்தபின், ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து விலகத்தயார் என தோனி அறிவித்தார். இதற்கு சக வீரர்களுடன் ஒத்துழைப்பு கிடைக்காததே காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து ரவி சாஸ்திரி கூறியது: தோனிக்கும், கோஹ்லிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது முட்டாள்தானமானது. இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. ஒருவேளை பிரச்னை இருந்திருந்தால், கடந்த சில ஆண்டுகளாக எப்படி 70 சதவீத போட்டிகளில் வெல்ல முடியும்.
தோனி கிரிக்கெட் ஜாம்பவான். அதே நேரம் கோஹ்லியை எடுத்துக் கொண்டால், தற்போதுதான் 26 வயதாகிறது. இளம் வீரரான இவர் ஆக்ரோஷமாக செயல்படுகிறார். கேப்டன் பதவியில் இவர் ‘செட்’ ஆவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் தேவைப்படும். இந்திய அணியை பொறுத்தவரை கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் 400 ரன்களுக்கு மேலாக குவித்தது. இதன் பின் நடந்த உலக கோப்பை தொடரிலும் முன்னேற்றம் கண்டது. இப்படி ஒவ்வொரு முறையும் அணி வளர்ச்சி கண்டுதான் உள்ளது.
இந்திய அணியில் என் பொறுப்பு சவாலானது. நம்முடைய ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவர். எல்லா நேரங்களிலும் வெற்றியை எதிர்பார்ப்பர். சில நேரங்களில் தோல்வி அடைந்தால், எதிர்மறையான விமர்சனங்கள் வரும். இருப்பினும் கடந்த 35 ஆண்டுகளாக ஒரு வீரர், நிர்வாகி என பல பதவிகளில் வகித்துள்ளேன். இதனால் எல்லா நேரங்களிலும் நிதானமாக இருப்பேன்.