எம்ஜிஆர், ரஜினிகாந்த், அஜித் தோற்றங்களில் சிம்பு !
சிவாஜி படத்தில் ஒரு டூயட் பாடலில் ரஜினிகாந்த் எம்ஜிஆர், சிவாஜி போன்று மேக்கப் போட்டு பாடி ஆடுவார். அப்படி ஒரு விஷயத்தை தன்னுடைய வாலு படத்தில் இணைக்க வைத்துள்ளார் சிம்பு. தன்னை மனதுக்குள் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கம் சிம்பு, அஜித்தின் தீவிரமான ரசிகர் என காட்டிக் கொண்டு அவருடைய ரசிகர்களை தன்னுடைய படத்தையும் பார்க்க வைக்கும் டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார். இப்போது தன்னை எம்ஜிஆர், ரஜினி, அஜித் ஆகியோராகவே நினைத்துக் கொண்டு அதை வாலு படத்தின் பாடலிலும் பயன்படுத்திருக்கிறார். வாலு படத்தில் நீண்ட காலமாகவே எடுக்கப்படாத பாடல் ஒன்று இருந்தது. அதை சரோஜாதேவி, மீனா, சிம்ரன் ஆகியோரை நடிக்க வைத்து படமாக்கலாம் என்றுதான் சிம்பு முடிவு செய்து வைத்திருந்தாராம். இடையில் என்ன நடந்ததோ அந்த எண்ணத்தை விட்டு விட்டு படத்தின் நாயகியான ஹன்சிகாவையே கேளுங்கள், அவரை வைத்தே இந்தப் பாடலை எடுத்து முடித்து விடலாம் என சொல்லியிருக்கிறார்.
சிம்புவின் பேச்சை தட்டாத இயக்குனரும் ஹன்சிகாவிடம் விஷயத்தை சொல்லி எப்படியோ சம்மதம் வாங்கிவிட்டார். கடந்த சில நாட்களாக சென்னையில் இந்தப் பாடலின் பரபரப்பான படப்பிடிப்பு நடந்து வருகிறது. எம்ஜிஆர், ரஜினி கெட்டப்பில் நடித்தாயிற்று, இன்று அஜித்தின் சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் பாடலைப் படமாக்க உள்ளேன் என சிம்புவே டிவீட் செய்து பரபரப்பை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். டிரைலரிலும் அஜித்தைப் புகழ்ந்து தள்ளிய சிம்பு இப்போது அஜித்தின் தோற்றத்திலும் நடிப்பது அஜித்துக்கு அவர் வைக்கும் ஐஸோ ஐஸ் என்கிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.