"இது என்ன மாயம்" - விமர்சனம்
அருணாக விக்ரம் பிரபு, வித்தியாசமான பாத்திரத்தில் காதல் புரோக்கராகவும், கீர்த்தி சுரேஷின் காதலராகவும் களை கட்டியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ், மாஜி நாயகி மேனகாவின் வாரிசு என்பதையும் தாண்டி மப்பும், மந்த்தாரமாக தன் கயல்விழிகளால் ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போடுகிறார். சந்தோஷாக வரும் நவ்தீப், விக்ரம் பிரபுவின் அப்பாவாக வரும் நாசர், அம்மா அம்பிகா, சார்லி, லொள்ளுசபா ஜீவா, பாலாஜி வேணுகோபால், ஆர்.ஜே.பாலாஜி, அஜய் டைசக், லுத்புதீன் பாஷா, காவ்யா ஷெட்டி, சுதாகிருஷ்ணா அய்யர் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து, பாத்திரத்திற்கு மேலாகவே நடித்திருக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்... உள்ளிட்ட ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான ஒய்யாரா ராகம். அனைத்தும் சுபராகம் என்பது இனிமை. நீரவ்ஷாவின் ஔிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் துடைத்து வைத்த வௌ்ளி குத்துவிளக்காய் மிளிர்வது இது என்ன மாயம் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. ஆன்டனியின் படத்தொகுப்பும் நச்-டச். விஜய்யின் எழுத்து - இயக்கத்தில், இது என்ன மாயம் படத்தின் டைட்டிலுக்கு ஏற்பவே சினிமாட்டிக்ஸ், டிரமாட்டிக்ஸ் காட்சிகள் கொஞ்சமே கொஞ்சம் மாய்மாலமாக, சற்றே நெருடலாக தெரிந்தாலும் இது என்ன மாயம் - இளைஞர்களை கவரும் காதல் மயம்!