‘கேப்டன் பதவி வழங்கப்பட்டது ஆச்சரியம் அளித்தது’ இந்திய வீரர் ரஹானே பேட்டி !






                                               இந்திய கிரிக்கெட் அணி வருகிற 7–ந்தேதி முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் டோனி, விராட் கோலி, அஸ்வின், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அஜிங்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து 27 வயதான ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது:–

                                             ‘என்னை கேப்டனாக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு, எனக்கு ஆச்சரியமான ஒரு செய்தியாகவே வந்து சேர்ந்தது. ஏனெனில் கேப்டன் பதவி குறித்து நான் சிந்தித்ததில்லை. அந்த செய்தியை கேட்டதும், எப்படி உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. எனது பெற்றோரை அழைத்து ஆசி பெற்றேன். அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். படிப்படியாக அந்த செய்தி என்னை ஆக்கிரமிக்க தொடங்கியதும், புதிய பொறுப்பை திறம்பட சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை வந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது புதிய சவாலாகும்.

                                              என்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பது எனக்கு தெரியும். என் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. கடந்த 4–5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். அதில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். நான் எப்போதும் உலகின் சிறந்த வீரராக விளங்கவே விரும்புகிறேன். டோனி, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோரின் கீழ் விளையாடி பல்வேறு விதமான கேப்டன்ஷிப் பண்புகளை கற்று இருக்கிறேன். டோனியின் கீழ் விளையாடும் போது, களத்தில் எப்படி பதற்றமின்றி செயல்படுகிறார் என்பதை கவனித்து இருக்கிறேன். கடினமான சூழலையும் பொறுமையான வழியில் கையாள்வதில் தனிச்சிறப்பு மிக்க ஒரு வீரர். அவரிடம் இருந்து இத்தகைய பண்பை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். விராட் கோலியின் கட்டுப்பாடான ஆக்ரோஷம், அவரது பேட்டிங்கிலும், கேப்டன்ஷிப்பிலும் காணலாம். இதை கோலிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பும் விஷயமாகும்.

                                               ராகுல் டிராவிட்டின் தலைமையின் கீழ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். களத்தில், எல்லா விஷயங்களையும் எளிதாக வைத்துக் கொள்வது டிராவிட்டின் குணாதிசயம். அத்தகைய பண்பை அவரிடம் இருந்து கற்றுள்ளேன். அது மட்டுமின்றி எனக்கு என்று சொந்தமாக சில யோசனைகள் உண்டு. அதை களத்தில் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது தெரியும்.


                                              ஜிம்பாப்வே அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். தரவரிசை எப்படி இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு தொடரும் சவாலானது தான். தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ள அணி மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கேப்டனாக வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். மேலும் நமது சொந்த ஆட்டத்தின் மூலம் அணியை முன்னெடுத்து சென்று மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பதையும், எல்லா நேரமும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவதையும் விரும்புகிறேன். இவ்வாறு ரஹானே கூறியுள்ளார்.

                                             ரஹானே இந்திய ஒரு நாள் போட்டி அணியின் 23–வது கேப்டன் ஆவார். அவர் இந்திய அணிக்காக இதுவரை 55 ஆட்டங்களில் விளையாடி 2 சதம் உள்பட 1,593 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]