கோபா கால்பந்து: சிலி அணி சாம்பியன் !



                                                          கோபா அமெரிக்கா கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது சிலி அணி. பரபரப்பான பைனலில் ‘பெனால்டி ஷூட்–அவுட்’ முறையில் அர்ஜென்டினாவை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உலக கால்பந்து அரங்கில் கொடி கட்டிப் பறக்கும் தென் அமெரிக்க நாடுகள் இடையிலான  44வது கோபா அமெரிக்க தொடர் சிலியில் நடந்தது. இதன் பைனலில் சிலி, அர்ஜென்டினா அணிகள் மோதின. 
                                                          இரு அணிகளும் துவக்கத்தில் இருந்தே அலை அலையாக தாக்குதல் நடத்தின. ஆனாலும் ‘பினிஷிங்’ இல்லாததால் கோல் வாய்ப்புகள் வீணாகின. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் சிலியின் சான்ச்சஸ் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல்கீப்பர் ரொமேரோ துடிப்பாக தடுத்தார். பதிலுக்கு 20வது நிமிடத்தில் ‘பிரீ–கிக்’ மூலம் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அடித்த பந்தை அகுயரோ தலையால் முட்டி வலைக்குள் தள்ள முயற்சித்தார். இதனை சிலி கேப்டனும் கோல்கீப்பருமான கிளாடியோ பிராவோ ‘சூப்பராக’ தடுத்தார். அர்ஜென்டினாவின் முன்னணி வீரரான ஏஞ்சல் டி மரியாவை சிலி வீரர்கள் குறி வைத்தனர். இவரை தொடர்ந்து மடக்க, தொடை பகுதியில் காயம் அடைந்து 29 நிமிடத்தில் வெளியேற, பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இவருக்கு பதில் லவாசி களமிறக்கப்பட்டார். முதல் பாதி முடியும் தருணத்தில் லவாசி அடித்த பந்தை மீண்டும் பிராவோ தடுத்தார். முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.  
                                                         இரண்டாவது பாதியிலும் இரு அணிகளின் தற்காப்பு பகுதிகளை முன்கள வீரர்களால் தகர்க்க முடியவில்லை. 83வது நிமிடத்தில் சிலியின் சான்ச்சஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் இருந்து நுாலிழையில் விலகிச் சென்றது. 87வது நிமிடத்தில் மெஸ்சி பந்தோடு படுவேகமாக வந்தார். ஆனால், ‘ஆப்–சைடு’ என அறிவிக்க நொந்து போனார். ‘ஸ்டாபேஜ்’ நேரத்தில்(90+1) மெஸ்சி கொடுத்த பந்தை பெற்ற அகுயரோ கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். இரண்டாவது பாதியும் கோலின்றி முடிந்தது. பின் கூடுதல் நேரத்தில்(15+15) அர்ஜென்டினா அணி மந்தமாக ஆடியது. சிலியை பொறுத்தவரை தற்காப்பு ஆட்டத்தை கையாண்டதால் கோல் அடிக்க இயலவில்லை.
                                                      இதையடுத்து முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் நிர்ணயிக்கப்பட்டது. இதில், இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்படும்.
                                                      முதல் வாய்ப்பில் சிலியின் பெர்னாண்டஸ் வலது கால் மூலம் சுலபமாக கோல் அடித்தார். இதே போல அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி தனது இடது கால் மூலம் அழகாக கோல் அடித்தார். இரண்டாவது வாய்ப்பில் சிலியின் விடால் கோல் அடித்தார். ஆனால், அர்ஜென்டினாவின் ஹிகுவேன் கோல் போஸ்டுக்கு வெளியே பந்தை அடித்து வாய்ப்பை வீணாக்கினார். மூன்றாவது வாய்ப்பில் சிலியின் அராங்கியுஸ் அருமையாக கோல் அடித்தார். மறுபக்கம் அர்ஜென்டினாவின் பெனிகா அடித்த பந்தை சிலி கோல்கீப்பர் பிராவோ அருமையாக தடுத்தார். நான்காவது வாய்ப்பில் சிலியின் அலெக்சிஸ் சான்ச்சஸ் கோல் அடிக்க, அரங்கில் இருந்த உள்ளூர் ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது. சிலி வெற்றி உறுதியான நிலையில் எஞ்சிய வாய்ப்புகளுக்கு அவசியமில்லாமல் போனது. சிலி அணி ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 4–1 என்ற கோல் கணக்கில் வென்று ‘கோபா’ கோப்பையை தட்டிச் சென்றது. அர்ஜென்டினா இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் தேடியது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad