மிளகின் வகைகளும், அதன் மேன்மையான மருத்துவ குணங்களும்
மிளகு(மரீசம்)
(Piper Nigrum)
தன்மை
இது கார்ப்புச் சுவை கொண்டது. சீரண சக்தியை வலுப்படுத்தும். கபத்தையும், வாதத்தையும் போக்கும். உஷ்ண சக்தியைக் கொடுக்கும். வறட்சி மற்றும் பித்தத்தை தோற்றுவிக்கும். இருமல், கிருமி நோய் இவற்றைப் போக்கும்.
மிளகின் வகைகள் மற்றும் தன்மைகள்
- பச்சை மிளகு செரிமானம் ஆகும் பொழுது இனிப்புச் சுவை கொள்ளும். இது அதிக உஷ்ணம் தராது. கபத்தைப் போக்கும். பச்சை மிளகு பித்தத்தை வளர்க்காது.
- மிளகுக் கொடி தரையில் படரும். அருகில் மரம் முதலியவை இருந்தால் அவற்றில் பின்னிக் கொண்டு வளரும். கொடியில் சிறுகிளைகள், முடிச்சுகள் போன்ற கணுக்கள் காணப்படும். ஒவ்வொரு கணுவிலிருந்தும் மெல்லிய கம்பிகளைப் போன்ற கொடிகள் படர்ந்து பற்றிக் கொள்ளும்.
- இதன் இலை அகன்ற வெற்றிலை போன்று காணப்படும். இவற்றில் ஐந்து நரம்புகள் நன்றாகக் காணப்படும். இலைகளின் மேற்பகுதி பச்சை நிறத்துடனும், அடிப்பகுதி வெளிர்ப்பச்சை நிறம் கொண்டும் இருக்கும். இந்த கொடிகளில் ஆண், பெண் என்ற இரண்டு வகைகள் தனித்தனியாக வளரும். சில கொடிகளில் ஆண், பெண் மலர்கள் இன்டு வகையும் காணப்படும்.
- கூச்பிகார், அஸ்ஸாம், மலபார், சிங்கப்பூர், மலேயா ஆகிய பகுதிகளில் விளையும் மிளகில் இரு வகைகள் உண்டு. ஒன்று கிழக்குப் பகுதியில் தோன்றுவது, மற்றொன்று தெற்குப் பகுதியில் தோன்றுவது. கிழக்குப் பகுதியில் தோன்றும் மிளகைக் கழுவினால் வெண்மை நிறம் பெறும். தெற்குப் பகுதியில் தோன்றும் மிளகு சிறந்தது. இதை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் வயிற்று வலி, நீர்சுருக்கு போன்ற நோய்களை தோற்றுவிக்கும்.
தீர்க்கும் நோய்கள்
வயிற்று உப்புசம், செரிமானக் குறைபாடு, அக்னி பலம் மேம்படும். பல்வலிக்கு இதன் தூளைத் தேய்ப்பது நல்லது. உள்நாக்கு வளர்ச்சிக்கு மிளகுக் கஷாயத்தால் வாய்க் கொப்பளிக்க வேண்டும். வினிகருடன் இதைத் தேய்த்தால் பூச்சிக்கடி தீரும். நச்சுக்களை முறிக்கக்கூடியது. இரத்த சுத்திகரிப்பானாக செயல்படும். இது ஒரு அருமருந்து.