கொழுப்பை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
உலகளவில் சர்க்கரை நோய் பாதிப்பை அடுத்து கொலஸ்டிரால் எனும் கொழுப்பு நோய் பாதிப்பு அதிகம் காணப்படுவது இந்தியாவில் தான். சர்க்கரை நோய் வந்து விட்டாலே அதன் உடன் பிறப்புகளான ரத்த அழுத்தம் (பிரஷர்), கொழுப்பு (கொலஸ்டிரால்) போன்றவையும் பின் தொடர்ந்து வருகின்றன. இதனை கவனிக்காமல் விட்டால் இதயம், மூளை முதல் உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும். தற்போதைய நமது உணவுபழக்கம், மது மற்றும் புகை, உடற்பயிற்சி இன்மை போன்றவை இந்நோய்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. கொலஸ்டிரால் பற்றியும் அதனை கட்டுப்படுத்துவது பற்றியும் மைலாடியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பிரசில்லாசரோன் கூறியதாவது:
கொழுப்பு அதிகமாக உடலில் தங்கும் போது உடனடியாக வெளிக்காட்டாது. ஆனால் உடலில் ஆழமான உறுப்புகளில் இதன் தாக்கம் இருக்கும். அதிகமாக படிவதால் சுத்த ரத்த தமனிகளில் (artery) அடைப்பு ஏற்படுத்தும் நிலையை அத்ரோஸ் கிளோரிஸ் என்கிறோம். இது இதய நோய்க் குரிய அச்சுறுத்தும் அறிகுறி.உடலில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஆல்கஹால் டிரை கிளிசரீசாக மாற்றப்பட்டு கொழுப்பு வடிவில் உடலில் சேர்கிறது. பெரும்பாலும் மதுபானம் அருந்துவோர் புகைப் பிடிப்பவர்களுக்கு, அதிக எடை உடையவர்களுக்கு இது அதிகம் உள்ளது. இதன் அளவு 150 க்கு அதிகமாக இருந்தால் உடலில் செயல்பாடுகள் பாதிப்பால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வரும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள் :
கரையும் தன்மையுள்ள நார்சத்து உணவுகள் கெட்ட கொழுப்பை குறைக்கும். தானிய வகைகள், ஓட்ஸ், பழங்கள், காய்ந்த கனிகள் (உலர் பழங்கள்) காய்கறிகள், ஓமோகா 3 போன்றவற்றில் கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது.ஆளி விதை, மீன் எண்ணெய், வெந்தயம், பிகாம் போஸ் விட்டமின், கடுக்காய், ஓட்ஸ் போன்றவற்றை உணவுடன் உட்கொள்ள வேண்டும். ரெட் ஒயின், கிரீன் டீ, பீன்ஸ், பூண்டு, ஆலிவ் எண்ணெய் போன்றவையும் உட்கொள்ளலாம். மல்லி தூளை கொதிக்க வைத்த நீர், அல்லது 2 சுட்ட வெள்ளை பூண்டு, காட்டு நெல்லிக்காய் பொடி, தேங்காய் எண்ணெய், தேன், மீன் எண்ணெய், சம்பா அரிசி, ஆலிவ் எண்ணெய். பீன்ஸ், ஆப்பிள் சீடர் வினிகர் 2 கரண்டி கலந்து சாப்பிடலாம்.வெள்ளை பூண்டு, மஞ்சள், இஞ்சி, வால் மிளகு, நல்ல மிளகு கெட்ட கொழுப்பை குறைக்கிறது. மருதம் பட்டை, வெங்காயம் கெட்ட கொழுப்பை மாற்றி நல்ல கொழுப்பிற்கு உதவுகிறது.