சென்னை சேப்பாக்கம் உலக கோப்பை! * ‘கேலரி’ பிரச்னை தீருமா !
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின்(2016) சில போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது. இந்த அரிய வாய்ப்பு சேப்பாக்கம் மைதானத்துக்கு பக்கத்தில் வந்த போதும், ‘கேலரி’ பிரச்னை பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே போட்டிகள் திட்டமிட்டபடி இங்கு நடக்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2007ல் நடந்த முதல் தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. ஆறாவது தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் நடக்கவுள்ளது. இதற்கான இடங்களை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ) நேற்று வெளியிட்டது.
இதன்படி கோல்கட்டா, பெங்களூரு, சென்னை, தரம்சாலா,மொகாலி, மும்பை, நாக்பூர், புதுடில்லி ஆகிய 8 இடங்களில் நடக்கவுள்ளது. கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பைனல் அரங்கேறுகிறது. கடந்த 2011 உலக கோப்பை தொடரில் (50 ஓவர்), இம்மைதானத்தில் இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால், புதுப்பிக்கும் பணிகள் முழுமை அடையாததால், பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே, இங்கு உலக கோப்பை தொடரின் இரண்டு முக்கிய போட்டிகள் (1987, பைனல்), 1996 (அரையிறுதி) நடந்தன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 3 புதிய ‘கேலரிகள்’ (ஐ,ஜே,கே) பாதுகாப்பாக இல்லை எனக்கூறி சென்னை மாநகராட்சி அனுமதி மறுத்தது. இதை இடிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்த ‘கேலரிகளை’ காலியாக வைத்து போட்டியை நடத்த ஐ.சி.சி., விரும்பவில்லை. இப்பிரச்னை காரணமாக இங்கு உலக கோப்பை தொடரின் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஒருவழியாக தற்போது அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் ‘கேலரி’ பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கு பி.சி.சி.ஐ., அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனை நிறைவேற்ற தவறினால், போட்டியை நடத்தும் உரிமையை சென்னை இழக்க நேரிடும்.
பி.சி.சி.ஐ., செயலர் அனுராக் தாகூர் கூறியது: உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரை முதல் முறையாக நடத்துவது பெருமை. உலக கோப்பை தொடரின் ஒரு அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும். அதே போல மற்றொரு அரையிறுதி டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கலாம். தற்போது மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பராமரிப்பு பணிகளும் துவங்கிவிட்டன. இத்தொடர் ரசிகர்கர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும். தவிர, இதற்காக நிர்வாக கமிட்டி பி.சி.சி.ஐ., தலைவர் டால்மியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.