உலகிலேயே குறைந்த தடிமனில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் !
கேன்வாஸ் சில்வர் 5 என்ற பெயரில் அண்மையில் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகிலேயே மிகக் குறைவான தடிமன் கொண்ட போன் என்ற பெயரினைப் பெற்றுள்ளது. இதன் தடிமன் 5.1 மிமீ மட்டுமே. கேன்வாஸ் சில்வர் 5 ஸ்மார்ட் போனில் 4.8 அங்குல அளவில் கெபாசிடிவ் டச் திரை தரப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே AMOLED வகையைச் சேர்ந்தது. இதன் ரெசல்யூசன் 720 x 1280 அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. திரைக்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இருந்தும் கவனமாக, இது போனின் தடிமனை உயர்த்தாத வகையில் அமைந்துள்ளது. இதில் Qualcomm Snapdragon 410 குவாட் கோர் ப்ராசசர், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பதற்கான ஸ்லாட் இல்லாததால், இதனை அதிகப்படுத்த முடியாது. இதன் பின்புறமாக 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் இயங்குகின்றன. வீடீயோ பதிவும் திறன் 1080p@30fps ஆக உள்ளது. முன்புறமாக 5 எம்.பி. திறனுடன் இயங்கும் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் குறைந்த தடிமனைக் கொண்டது மட்டுமில்லாமல், எடையும் மிகவும் குறைவாக 97 கிராமாக உள்ளது. லவுட்ஸ்பீக்கர், எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி புளுடூத் மற்றும் ஹாட் ஸ்பாட் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. அக்ஸிலரோமீட்டர் சென்சார் இயங்குகிறது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். வசதி உள்ளது. இமெயில், புஷ் மெயில் வசதி உள்ளன. எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2,000mAh திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 மணி நேரம் பேச முடியும். 345 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது.
ஆனால், மைக்ரோமேக்ஸ் வழக்கத்திற்கு மாறாக, இதில் ஒரு நானோ சிம் மட்டுமே இயக்க முடியும். இருப்பினும் எல்.டி.இ. அலைவரிசை இணைப்பு கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் சிஸ்டம் இயங்குகிறது. இதன் விலை ரூ. 17,999. வெள்ளை வண்ணத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன், அடுத்த மாதம் முதல் இணைய வர்த்தக தளங்களிலும், மொபைல் போன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.