"மாரி - விமர்சனம்"





                                    தனுஷ் நடித்து, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் மாரி ! மாரி, ரசிகர்களை வாரி அணைத்து கொள்ள வைத்திருக்கிருக்கிறதா..?, சாரி சொல்ல வைத்திருக்கிறதா...? இதோ பார்ப்போம்...

                                    கதைப்படி, சென்னை திருவல்லிக்கேணி ஏரியாவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனுஷ், தனது நண்பர்களுடன் சென்று பந்தைய புறாக்களை வளர்த்து அதன்வாயிலாக துட்டு பார்த்து வரும் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அந்த ஏரியாவின் பெரிய தாதா சண்முகராஜனுக்கும், அதே ஏரியாவிலிருக்கும் இன்னொரு தாதாவுக்கும் மாமூல் உள்ளிட்ட விஷயங்களில் முட்டல் மோதல் பிரச்னை இருந்து வருகிறது. எதிர்பாராத ஒரு விவகாரத்தில், ஒருநாள் சண்முகராஜனுக்கு எதிரான தாதாவை தனுஷ் கொன்று விடுகிறார். அதுமுதல், தனுஷை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடும் சண்முகராஜன், திருவல்லிக்கேணி ஏரியாவையும் தனுஷ்கே தருகிறார். அந்த ஏரியாவில் பெரிய கில்லாடி கேப்-மாரியாகிவிட்ட தனுஷ், தனது சகாக்களுடன் சேர்ந்து கொண்டு ஏரியாவுக்குள் அனைவருக்கும் இடையூறாக அதகளம் பண்ணுகிறார். இதனால் அந்த ஏரியாவின் சிறுசு முதல் பெருசு வரை சகலரும் தனுஷை சபிக்கிறார்கள். இந்நிலையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்ஸாக பொறுப்பேற்கும் விஜய் யேசுதாஸ், அந்த ஏரியாவின் கில்லாடி, கேப் மாரி தனுஷை பற்றி கேள்விப்பட்டு ஆக்ஷனில் குதிக்கிறார்.


                                           தனுஷ், பெரிய ரவுடி, தாதா, ஒரு கொலையை செய்த கொலையாளி என்பது விஜய் யேசுதாஸ்க்கு தெரிய வந்தாலும், தனுஷ் தான் கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். அதேநேரம், தனுஷின் தாதா ஏரியாவான திருவல்லிகேணிக்கு, பேஷன் டிசைனரான காஜல் அகர்வால் தன் குடும்பத்தோடு குடி வருகிறார். அந்த ஏரியாவிலேயே ஒரு பொட்டிக்ஸ் ஷாப்யையும் ஆரம்பித்து தன் பேஷன் டிசைன் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார். தனது ஏரியாவுக்குள் தன்னுடைய அனுமதி இல்லாமல் துணிக்கடை ஆரம்பித்த காஜலின் கடைக்கு சென்று தனுஷ் கலாட்டாவில் ஈடுபடுகிறார். இதனால் தனுஷ் மீது காஜல் கடுப்படைகிறார். காஜலின் கடுப்பை மேலும் வெறுப்பாக்கும் விதமாக காஜலின் கடைக்கு தானும் ஒரு பங்குதாரர் என்றும் சொல்லிகிறார் தனுஷ். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் காஜல், மேலும் தனுஷ் மீது காண்ட் ஆகிறார். இந்நிலையில், ஒருநாள் காஜல் கடை வைப்பதற்கு வட்டிக்கு பணம் கொடுத்த கோபி, தான் கொடுத்த கடனை வட்டியுடன் உடனடியாக திரும்பி கொடுக்கும்படி காஜலிடம் வம்பு செய்கிறார். இந்த பிரச்னையில் மூக்கை நுழைக்கும் தனுஷ், காஜலுக்கு உதவி செய்கிறார். அன்றிலிருந்து தனுஷ் மீது காஜலுக்கு தனி பிரியம் ஏற்படுகிறது. அதன்பின் தன்னுடன் நெருக்கமாகும் காஜலுடன், தனுஷ் ஒருநாள் செம மப்பில் தான் செய்த கொலை பற்றி உளறுகிறார். அதை காஜல் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்து காவல் துறையிடம் ஒப்படைக்கிறார். போலீஸ் தனுஷை கைது செய்து அவரை சிறையில் தள்ளுகிறது. அந்தப்பகுதியே தனுஷ் சிறை சென்றதை கொண்டாடுகிறது. இதன்பின் தனுஷின், காஜல் மீதான காதலும், தனுஷ்க்கு போடப்பட்ட காவலும் என்ன ஆகிறது. தனுஷ் நல்லவரா...? கெட்டவரா...? காஜலும், அந்த ஏரியா மக்களும் தனுஷை புரிந்து கொண்டார்களா...? என்பது மாரி படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை.

                                           தனுஷ், மாரி எனும் ரவுடி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி, கழுத்து நிறைய தங்க சங்கிலியும், பெரிய பார்டர் போட்ட வேஷ்டி, பளபள கலர் கலர் சட்டைகள்... என சென்னை ஏரியா தாதா மாதிரியே படம் முழுக்க பக்காவாக வலம் வந்திருக்கிறார். காதோரம் நீண்டு இருக்கும் பெரிய கிருதா, அதை உதட்டோரத்தில் இருந்து எட்டி பிடிக்க முயலும் முறுக்கு மீசை என இளம் ரவுடியாகவே வாழ்ந்திருக்கிறார் தனுஷ். அதிலும், சண்டைக்காட்சிகளிலும், பாடல் காட்சி நடனங்களிலும் பட்டைய கிளப்பி இருக்கும் மனிதர் முதல் பாடலில் போடும் குத்தாட்டத்தை பார்த்து தியேட்டரே ஆட்டம் போடுகிறது, அதிர்கிறது. அதேநேரம் சிறியவர்கள் முதல் இளஞர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள தனஷ், படத்தில் அதிகப்படியாக புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சிகரெட் பிடித்தால் தான் தாதா என்று சொல்வார்களா...? தனுஷ்! கதாநாயகி காஜல், இளம் பெண் பேஷன் டிசைனராக தன் ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரியே விதவிதமான உடைகளில் வந்து ரசிகர்களை கவருகிறார். நடிப்பிலும் இளமை துடிப்பிலும் கூட அம்மணி இனிப்பு கடைதான்! பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் வாரிசும், இளம் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ், போலீஸ் சப்-இன்ஸாக பக்காவாக பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். விஜய் யேசுதாஸ்க்கு நடிப்பில் இதுதான் நடிப்பில் முதல்படமா...? என ஆச்சர்யமாக கேட்கும் அளவிற்கு நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. படத்தில் தனுஷ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட சகலரையும் தூக்கி சாப்பிட்டு வருகிறார் தனுஷின் நண்பராக வரும் ரோபா சங்கரும், கல்லூரி வினோத்தும் மாரி படத்தில் காமெடியில் கதகளி ஆட்டம் ஆடி அதகளம் பண்ணியிருக்கின்றனர். தனுஷ், செஞ்சுருவேன்.... உள்ளிட்ட ஒவ்வொரு டயலாக் பேசும்போது இவர்கள் கொடுக்கும் காமெடி பதிலடி வசனங்கள், தனுஷ் ரசிகர்கள் நிரம்பியிருக்கும் தியேட்டர்களிலேயே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்துவது ஆச்சர்யம். காளி, சண்முகராஜன், மெட்ராஸ் கோபி உள்ளிட்டோரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். காதலில் சொதப்புவது எப்படி,வாயை மூடி பேசவும் உள்ளிட்ட காதல் படங்களையே இயக்கி வந்த இளம் இயக்குநர் பாலாஜி மோகன், ஒரு தாதாயிசம் படத்தையும், காதல் ரசம் சொட்ட தர முயன்றிருக்கிறார்.  அது சில இடங்களில் அவரை காப்பாற்றினாலும், பல காட்சிகளில் அவரை காலை வாரிவிடுகிறது.              

                                          ரவுடியிசம் கதை என்றாலும் படத்தில் கத்தி, அருவாள், ரத்தம், துப்பாக்கி சத்தம் என ரசிகர்களை பயமுறுத்தும் காட்சிகள் பெரிதாக இல்லாமல் இருப்பதற்காகவே பாலாஜி மோகனுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம். அனிரூத்தின் பின்னணி இசையும், பாடல்கள் இசையும் ஹாட் பீட். ஓம் பிரகாஷின் ஔிப்பதிவும் பாடல் காட்சிகளிலும் சரி, படக்காட்சிகளிலும் சரி பக்காவாக பளிச்சிட்டிருப்பது மாரி படத்திற்கு பெரும் ப்ளஸ். ஆனாலும் தனுஷ் ரசிகர்களுக்கு கில்லாடி கேப்-மாரியாக தெரியும் மாரி - அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒரே மாதிரி தாதயிச கதையமைப்புகளால் கொஞ்சமே கொஞ்சம் சொல்ல வைக்கிறது சாரி!



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad