"பாபநாசம்" ரீமேக் அஜய் தேவ்கன்..!
பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக நகத்தை கடித்துக்கொண்டு காத்திருக்கும் மாணவனை விட, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இன்னும் அதிக டென்சனில் தான் இருக்கிறார். காரணம் த்ரிஷ்யம் இந்தியில் ரீமேக்காகும் மலையாள த்ரிஷ்யத்தின் கதாநாயகன் இவர் தான். அட. இது ஏற்கனவே வெற்றி பெற்ற கதைதானே.. இந்தியிலும் எப்படியும் ஜெயிக்கத்தான் போகிறது, பின் எதற்கு டென்சன் என நினைக்கலாம்.. சாதாரணமாக ரீமேக் என்றால் பெரிதாக கவலைப்படமாட்டார் அஜய். இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் பிளாக் பஸ்டராக மாறி, தனது ஆளுமையை நிரூபித்துவிட்டு, இப்போது இந்தியில் அஜய் தேவ்கனை பார்த்து நீ எனக்கு என்ன தரப்போகிறாய் என்றல்லாவா கேட்கிறது. அதுதான் அஜய் தேவ்கனின் டென்சன்.. மலையாளத்தில் ஜார்ஜ் குட்டியாக, கன்னடத்தில் ராஜேந்திர பொன்னப்பாவாக, தெலுங்கில் ராம்பாபுவாக, கடைசியாக சமீபத்தில் தமிழில் சுயம்புலிங்கமாக இந்தப்படத்தின் நாயகர்கள் அனைவரும் வெற்றியை ருசித்துவிட்டார்கள்.. அதேபோல விஜய் சல்கோன்கராக நடிக்கும் தனக்கும் வெற்றிதான் என்பது அவருக்கு தெரியும் ஆனால் எந்த அளவுக்கு என்பதில்தான் அஜ்ய்தேவ்கனுக்கு சின்ன சந்தேகம்.. இதற்கிடையே கமல், மோகன்லாலை அஜய் தேவ்கன் மிஞ்சுவாரா என ஒரு பட்டிமன்றமும் ஓடிக்கொண்டு இருக்கிறது.“தயவு செய்து அவர்களோடு என்னை ஒப்பிடாதீர்கள்.. நானும் அவர்கள் இருவரையும் எனது போட்டியாளர்களாக எடுத்துக்கொள்ளவே இல்லை.. காரணம் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 35 வருடமாக சினிமாவில் கோலோச்சி வரும் ஜாம்பவான்கள்.. அவர்களது நடிப்பிற்காக பல விருதுகளை வென்றவர்கள்.. நான் என்னளவுக்கு முடித்தவரை நடித்திருக்கிறேன்”” என தன்னடக்கமாக கூறுகிறார் அஜய் தேவ்கன்.. இந்தி த்ரிஷ்யம் வரும் ஜூலை-31ஆம் தேதி வெளியாகிறது.