பாராட்டு மழையில் பயஸ் *விம்பிள்டனில் இந்தியா ஆதிக்கம் !
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, சுமித் நாகல் கோப்பை வென்று அசத்தினர். இவர்களுக்கு பிரதமர் மோடி, ‘ஜாம்பவான்’ சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 1990களுக்குப் பின் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதிக்கத் துவங்கினர். அடுத்து வந்த சானியா மிர்சா, ரோகன் போபண்ணா அதை அப்படியே தொடர்ந்தனர். சர்வதேச டென்னிஸ் அரங்கில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர்களால், கிரிக்கெட் மட்டும் தான் பிரபலம் என்றிருந்த இந்தியாவில் டென்னிசிலும் சாதிக்கும் நட்சத்திரங்கள் உள்ளனர் என நிரூபணம் ஆனது.
சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இந்தியாவுக்கு மறக்க முடியாத வகையில் அமைந்து விட்டது. முதலில், பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்று சாதனை படைத்தார். அடுத்து, கலப்பு இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிசுடன் இணைந்து கோப்பையை கைப்பற்றினார். இது இவரது 16 வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. பின் ஆண்கள் ஜூனியர் இரட்டையர் பிரிவில் 17 வயது இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் இரட்டையரில் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.