ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் அழிவு !
நம் உடலில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் தொற்றிவிடாதபடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருபவை வெள்ளை அணுக்கள். இவற்றை நுண்ணோக்கி மூலம் ஒரு வினாடிக்கு நூற்றுக்கணக்கான புகைப்படங்களை (டைம் லாப்ஸ் மைக்ரோஸ்கோபி) எடுத்து, அந்த காட்சிகளை வீடியோ படம்போல வேகமாக ஓட்டிப்பார்த்தனர் விஞ்ஞானிகள். அப்போது தான், வெள்ளை அணுக்கள் இறப்பதற்கு முன், சில வினோத மூலக்கூறுகளை வெளியே தள்ளுவது தெரியவந்தது. அழியும் வெள்ளை அணு, திடுதிப்பென்று இயக்கத்தை நிறுத்திவிடுவதாகவே விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால், அவை, 'வீக்கம், வெடிப்பு, சிதறல்' என்று மூன்று நிலைகளை கடந்த பிறகே அழிவதை வீடியோ அம்பலப்படுத்தியது. இக்கண்டுபிடிப்பை, 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற ஆய்வு இதழ் வெளியிட்டு உள்ளது. 'ஒரு வெள்ளை அணு வெடிக்கும்போது பாசி மணிச்சரம் போன்ற சிதறல் ஏற்படுகிறது. பின் அந்த சரத்திலுள்ள மணிகள் உதிர்ந்து, சிதைகின்றன' என்கிறார் வீடியோ ஆய்வுக் குழுவின் இணை தலைவர், ஜார்ஜியா அட்கின் ஸ்மித்.
பாசி மணி சிதறல் எதற்காக வெளிப்படுகிறது? 'நோய்களை உண்டாக்கும் தொற்றுக்கள் உடலில் புகுந்திருக்கின்றன என்ற சேதியை, இறந்து கொண்டிருக்கும் வெள்ளை அணு, அருகே உள்ள மற்ற அணுக்களுக்கு தெரிவித்து எச்சரிக்க இந்த ஏற்பாடாக இருக்கலாம்' என்கிறார் அட்கின் ஸ்மித். தொற்றுக் கிருமிகள் இறந்த வெள்ளை அணுக்களைக் கைப்பற்றி, உடலுக்குள் பரவும் விதம் பற்றி மருத்துவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு மேலும் தெளிவை ஏற்படுத்தும். 'வைரஸ், பாக்டீரியா போன்றவை உடலின் பிற பாகங்களுக்கு பயணிப்பதற்கு வாகனமாக இருப்பது எது என்பது தெரிய வந்திருக்கிறது' என்கிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர் டாக்டர் இவான் பூன். இந்த தகவலை வைத்து, நோய்களுக்கு செம்மையான சிகிச்சை முறைகளையும், வலுவான நோய் தடுப்பு மருந்துகளையும் உருவாக்க முடியும் என, மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.