‘பாபநாசம்’ 3 நாளில் சம கலெக்ஷன் !
கமலின் நடிப்பில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல்ரீதியாக இப்படம் ஏமாற்றத்தையே தந்தது. இதனால் ‘திருசியம்’ ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்திற்கு கமல் படங்களுக்கே உரிய வழக்கமான எதிர்பார்ப்பும், ஓபனிங்கும் இல்லை என்பதே உண்மை. இருந்தபோதிலும், படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு இந்த நிலைமை அப்படியே தலைகீழ் ஆனது. படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனும் இப்படத்தைப் பற்றி ‘ஆஹா ஓஹோ’வென புகழ்ந்து தள்ள அடுத்தடுத்த காட்சிகளுக்கு கூட்டம் வரத் தொடங்கியது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ‘பாநாசம்’ வெளியான பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்.
குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இப்படம் இருப்பதால் ஏ சென்டர் மட்டுமின்றி, பி மற்றும் சி சென்டர்களிலும், வெளிநாடுகளிலும்கூட நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் இப்படம் உலக அளவில் 23 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம், தமிழகத்தில் மட்டும் 15 கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம். கமல் படங்களைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை வசூல் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ‘மவுத் டாக்’ மூலமாக இப்படம் இன்னும் பல கோடிகளை வசூல் செய்யும் வாய்ப்பிருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.